கார் வாங்க, வீடு வாங்க, பட்டப்படிப்பு படிக்க என அனைத்திற்கும் வங்கிகளில் லோன் கிடைக்கிறது. அதிலும் கார் லோன் வாகன பிரியர்களுக்கு உற்ற தோழனாகவே மாறிவிட்டது. பணம் சேர்த்து வாகனங்கள் வாங்கிய காலம் மாறி இன்று லோன் பெற்று பிடித்த காரை வாங்கிக் கொள்கின்றனர். இப்படி வாங்கும் சிலருக்கு பிற்காலத்தில் ஈஎம்ஐ செலுத்த முடியாமல் போய்விடுகிறது.
எப்படி ஹோம் லோன் பெற்று செலுத்த மறுத்தால், வங்கிகள் வீட்டை பறிமுதல் செய்யுமோ அதே போல கார் லோன் பெற்று அதை சரிவர செலுத்தவில்லை என்றாலும் வங்கிகள் உங்களுடைய காரை கொண்டு சென்று விடும். இந்தப் பதிவில் எத்தனை ஈஎம்ஐ தவறவிட்டால் உங்கள் வாகனத்தை வங்கிகள் பறிமுதல் செய்யும் என்பதைப் பார்ப்போம்.
ஒரு சிலர் அவசர செலவுகள் மற்றும் பிற விஷயங்களால ஒன்று அல்லது இரண்டு ஈஎம்ஐ-களை தவற விட்டுவிடுவார்கள். அப்படி நீங்கள் தவறவிடும் பட்சத்தில் வங்கிகளோ அல்லது நீங்கள் கடன் பெற்ற நிதி நிறுவனமோ உங்களுடைய வாகனத்தை பறிமுதல் செய்ய முடியாது. இந்திய ரிசர்வ் வங்கி கார் லோனுக்கும் விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி இரண்டு அல்லது மூன்று ஈஎம்ஐ தவறவிட்டால் பிரச்சனை இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் வங்கிகள் உங்களுடைய வாகனத்தை தொடாது. ஆனால் வங்கி தரப்பில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் மூலம் ஈஎம்ஐ செலுத்த கோரி நெருக்கடி கொடுக்கப்படும்.

ஆனால் தொடர்ந்து தவணை செலுத்தாமல் 90 நாட்களை கடத்தி விட்டால் நீங்கள் கடன் பெற்ற நிதி நிறுவனம் உங்களுடைய காரை எடுத்துச் செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதாவது தொடர்ந்து மூன்று மாத ஈஎம்ஐ செலுத்த தவறும் பட்சத்தில் இந்த நடவடிக்கையை வங்கிகள் கையில் எடுக்கும். அப்படியானால் நேரடியாக உங்கள் வீட்டிற்கே வந்து விடுவார்களா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். வங்கிகளுக்கு அதற்கு அனுமதி இல்லை. சட்டப்பூர்வமான அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி தான் வங்கிகள் உங்கள் காரை பறிமுதல் செய்ய முடியும்.
மூன்று தவணைகளை தவறவிட்டால் என்ன நடக்கும்?: நீங்கள் மூன்று தவணைகளை தவறவிட்ட பிறகு 60 நாட்கள் வரை காலக்கெடு வழங்கப்படும். அதற்காக வங்கிகள் உங்களுக்கு ஒரு நோட்டீசை அனுப்பும். முழு நிலுவைத் தொகையையும் இந்த 60 நாட்களுக்குள் செலுத்தி விட்டால் பிரச்சனை இல்லை. இந்த 60 நாட்களை கடந்தும் உங்களால் பணம் செலுத்த முடியவில்லை என்றால் அதற்கு முன்னரும் ஒரு பறிமுதல் நோட்டீஸ் அனுப்பப்படும்.
இதையெல்லாம் செய்யாமல் வங்கிகளால் உங்களுடைய வாகனத்தை எடுத்துச் செல்ல முடியாது. அப்படி எடுத்துச் சென்றாலும் அது முற்றிலும் சட்ட விரோதமாகக் கருதப்படும். இப்படி உங்களுக்கும் நடந்தால் நீங்கள் தாராளமாக வழக்கு தொடரலாம். 60 நாட்களுக்குள் வங்கி ஊழியர்களோ அல்லது நீங்கள் கடன் பெற்ற நிதி நிறுவனத்தில் பணிபுரிபவர்களோ உங்களை மிரட்டி பணம் வாங்க முயற்சி செய்வார்கள். இவ்வாறு செய்வதும் சட்டப்படி குற்றமாகும். மேலும் உங்கள் வீட்டிற்கு காலை 8 மணிக்கு முன்னரும் மாலை 7 மணிக்கு பின்னரும் வந்து பணம் கேட்கக்கூடாது. பணத்தை வசூலிக்க வருபவர்கள் உங்களை அடித்தாலோ அல்லது வார்த்தைகளால் துன்புறுத்தினாலோ அதுவும் ஆர்பிஐ விதிகளின்படி குற்றமாக கருதப்படுகிறது.
சில வங்கி ஊழியர்கள் உங்களுடைய கார் சாவியையோ அல்லது நீங்கள் வாங்கிய வாகனத்தின் சாவியையோ எடுத்துக் கொண்டால் நீங்கள் தாராளமாக போலீசில் புகார் அளிக்கலாம். கால அவகாசம் முடிந்து உங்களுக்கு வங்கிகள் பறிமுதல் நோட்டீஸ் அனுப்பிய பிறகும் நீங்கள் பணத்தை ஏற்பாடு செய்யவில்லை என்றால் வங்கிகள் உங்கள் வாகனத்தை எடுத்துச் சென்று விடும். அப்படி எடுத்துச் சென்றாலும் உங்கள் வாகனத்தை மீண்டும் பெறுவதற்கு உங்களுக்கு ஒரு கடைசி வாய்ப்பு இருக்கிறது.
உங்கள் வாகனத்தை விற்பனை செய்வதற்கு முன்னர் நீங்கள் கடன் பெற்ற வங்கி அல்லது நிதி நிறுவனம் உங்களுக்கு ஒரு ஏல அறிவிப்பை அனுப்பி வைக்கும். உங்கள் வாகனத்தை மீண்டும் பெறுவதற்கான இறுதி வாய்ப்பு இதுதான். எனவே செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை ஏல நோட்டீஸில் குறிப்பிடப்பட்ட தேதிக்கு முன்னர் செலுத்தி விட்டால் நீங்கள் மீண்டும் உங்கள் வாகனத்தை வீட்டிற்கு எடுத்து வரலாம்.


Click it and Unblock the Notifications
