இந்திய குடிமக்களுக்கு ஆதார் கார்டு மிகவும் முக்கியமான அடையாளச் சான்றாக உள்ளது. வங்கி கணக்கு தொடங்குவது, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது என பல சேவைகளுக்கும் ஆதார் கார்டு அவசியமாகிறது. எனவே ஆதார் கார்டில் உங்களுடைய தகவல்கள் அனைத்தும் துல்லியமானதாக இருக்க வேண்டும். உங்கள் மொபைல் நம்பர் மாறி இருந்தாலும் அல்லது தவறான நம்பர் கொடுக்கப்பட்டிருந்தாலும் ஆதார் தொடர்புடைய சேவைகளை பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.
உங்களுடைய மொபைல் நம்பர் மட்டுமின்றி ஆதார் கார்டில் உள்ள பிற விவரங்களும் புதுப்பிக்கப்பட்ட நிலையில் இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு தகவலை நீங்கள் புதுப்பிப்பதற்கு முன்பு அதற்கான வரம்பு என்ன என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உதாரணமாக ஆதார் கார்டில் ஒருவருடைய பெயரை இரண்டு முறைக்கு மேல் மாற்ற முடியாது. அதையும் மீறி மாற்ற வேண்டும் என்றால் அதற்கு UIDAI-இன் சிறப்பு அனுமதி பெற வேண்டும். அதேபோல ஒவ்வொரு தகவல்களுக்கு என்றும் தனிப்பட்ட வரம்பு உள்ளது. அப்படி மொபைல் நம்பரை ஒருவர் எத்தனை முறை மாற்றலாம்? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் உங்கள் ஆதார் உடன் மொபைல் நம்பரை புதுப்பிப்பதற்கு எந்தவித வரம்பையும் அமைக்கவில்லை. எனவே எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் மொபைல் நம்பரை அப்டேட் செய்து கொள்ளலாம். புதிய மொபைல் நம்பரை பெற்றிருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக நம்பரை மாற்றி இருந்தாலோ தேவைப்படும் நேரத்தில் உங்கள் ஆதார் கார்டில் மொபைல் நம்பரை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
ஒவ்வொரு முறையும் நீங்கள் மொபைல் நம்பரை மாற்றக் கோரும்போது அதற்கான சார்ஜ் வசூலிக்கப்படும். இன்றெல்லாம் பல ஆதார் தொடர்புடைய சேவைகளுக்கும் OTP தேவைப்படுகிறது. எனவே OTP பெறுவதற்கு உங்களிடம் ஆக்டிவாக இருக்கும் மொபைல் நம்பரை ஆதார் உடன் இணைத்து இருப்பது அவசியம். ஆதார் கார்டில் உள்ள சில விவரங்களை ஆன்லைனில் அப்டேட் செய்ய முடியும் என்றாலும், சில விவரங்களை நீங்கள் ஆதார் பதிவு மையங்களில் தான் மாற்ற முடியும்.
அதேபோல உங்கள் மொபைல் நம்பரை மாற்ற நீங்கள் பதிவு செய்யப்பட்ட ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும். உங்கள் தனிப்பட்ட தகவலை பாதுகாப்பதற்காகவும் புதுப்பிப்பு செயல்பாட்டின் போது உங்கள் அடையாளத்தை சரி பார்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட மொபைல் நம்பரை குறிப்பிட்டு ஆதார் திருத்த படிவத்தை நிரப்பி, பிற அடையாளச் சான்றிதழோடு சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் பிறகு தேவையான பயோமெட்ரிக் சாரிபார்ப்பையும் முடிக்கவும். இந்த செயல்முறையை முடிப்பதற்கு சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும். உங்கள் கோரிக்கை செயலாக்கப்பட்டதும் புதிய மொபைல் நம்பர் ஆதார் உடன் இணைக்கப்படும்.
சில நாட்களுக்குள் புதுப்பிக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு SMS அனுப்பப்படும். சேவைகளை தடையின்றி பெறுவதற்கு உங்கள் மொபைல் நம்பர் உட்பட ஆதார் தகவல்களை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது அவசியம். எனவே உங்கள் மொபைல் நம்பரை மாற்றுவதற்கு எந்த வரம்பும் இல்லை. தேவைக்கேற்ப உங்கள் மொபைல் நம்பரை ஆதாரில் மாற்றியமைத்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications