இந்தியா போல் பல்வேறு கலாசாரங்களும், சுற்றுலாப் பயணிகளும் நிறைந்த நாட்டில் ஹோட்டல் தொழில் என்பது மிகுந்த வாய்ப்புகள் கொண்டதாகும். ஆனால், அதில் சில சவால்களும் இருக்கின்றன. இதனால், அது ஒரு முக்கிய வர்த்தகத் துறையாக திகழ்கிறது. இந்த தொழிலில் ஆரம்பிக்கத் தேவையான முதலீடு மற்றும் செலவுகள் பற்றி தெளிவான புரிதல் இருந்தால்தான் முன்னேற முடியும்.
இதுகுறித்து கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள 3 ஸ்டார் ஹோட்டல் ஐஸ்வரியா ஹோட்டல்ஸின் உரிமையாளர் சம்பத் குமார் குட்ரிட்டர்ன்ஸ் தமிழுக்கு பிரத்யேகமாக பல தகவல்களை வழங்கியுள்ளார்.

இடம் மற்றும் கட்டிடம் : ஹோட்டல் அமைப்பதற்கான இடம் மிக முக்கியம். நகரங்கள், சுற்றுலா இடங்களில் விலை அதிகமாக இருக்கும். இடத்தை வாடகைக்கு எடுக்க வேண்டுமானால், மாத வாடகை ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை கூட இருக்கும். கட்டிடம் கட்ட வேண்டுமானால், இடத்தின் விலை மற்றும் அதற்கான கட்டுமானச் செலவு என ரூ.50 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கூட தேவைப்படும்.
உள்கட்டமைப்பு செலவு : ஹோட்டலின் தரம் (Budget / 3-Star / 5-Star) பொருத்து அதன் உள்கட்டமைப்பு செலவுகள் பெரிதும் மாறுபடும். ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை உள்கட்டமைப்புகளுக்கே செலவாகும். மேலும் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏசி, ஹாட் வாட்டர் சிஸ்டம், பாட் பேட்டரி, உயரமான கட்டிடங்களில் லிப்ட் வசதி, ஜெனரேட்டர் போன்ற வசதிகள் அவசியம் இருக்க வேண்டும்.
உரிமங்கள் அவசியம் : உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சான்றிதழ், தீ பாதுகாப்பு அனுமதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி, உள்ளூர் நகராட்சி/பஞ்சாயத்து அனுமதி, GST பதிவு அவசியம் இருக்க வேண்டும். இவை அனைத்தையும் பெற வேண்டும் என்றால், அதற்கு ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை கூட செலவாகலாம்.
ஊழியர்கள் சம்பளம் மற்றும் பராமரிப்பு : சமையலர், பரிமாறுபவர், சுத்தம் செய்யும் பணியாளர், முன்பதிவு (Reception) ஊழியர் போன்றோரை கட்டாயம் பணிக்கு அமர்த்தியாக வேண்டும். நீங்கள் தொடங்கவுள்ள ஹோட்டலை பொறுத்து 5 முதல் 15 ஊழியர்கள் தேவைப்படுவார்கள். அவர்களுக்கு மாத ஊதியம் மட்டும் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவாகலாம்.
சமையல் மற்றும் உபகரணங்கள் : சமையலறை அமைப்பதற்கான உபகரணங்கள் ரூ.2 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை செலவாகலாம். மேலும், உணவுப் பொருட்கள், எரிவாயு மற்றும் தினசரி உணவுப் பொருட்கள் என மாதத்திற்கு ரூ.1.50 லட்சம் வரை கூட செலவாகும்.
தற்போது கடைகள், உணவகங்கள் போன்றவற்றை பிரபலம் ஆக்குவதற்கு விளம்பரங்கள் மிக அவசியமாக இருக்கிறது. அதேபோல் உங்கள் உணவங்களை Zomato, Swiggyஇல் பதிவு செய்யலாம். மேலும், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் செய்யலாம்.
ஒரு ஹோட்டல் தொழிலை இந்தியாவில் தொடங்க, மிகச்சிறிய அளவில் ரூ.10 லட்சம் வரை முதலீடு தேவைப்படலாம். மிகப்பெரிய அளவில் தொடங்க விரும்பினால், ரூ.1 கோடி முதல் ரூ.5 கோடி வரை கூட செலவாகலாம். முக்கியமாக, திட்டமிடல், தரமான சேவை, நம்பகமான ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கை பெறும் வகையில் செயல்பட வேண்டும். அறிவும், திட்டமிடலும் இருந்தால், ஹோட்டல் தொழிலில் நீங்களும் சாதிக்கலாம்.


Click it and Unblock the Notifications