பல ஊழியர்களும் கிராஜுவிட்டி என்ற வார்த்தையை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அதன் முழு விளக்கம் மற்றும் அது எப்படி கால்குலேட் செய்யப்படுகிறது என்ற விபரங்கள் குறித்து தெரியாமல் இருப்பீர்கள். உங்களுக்காகத்தான் இந்த பதிவு. இன்று கிராஜுவிட்டி என்றால் என்ன? மற்றும் ரூ.50,000 சம்பளம் பெறும் ஒருவர் 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நிறுவனத்தில் இருந்து வெளியேறினால் கிராஜுவிட்டி எவ்வளவு கிடைக்கும் என்ற விவரங்கள் குறித்து பார்ப்போம்.
கிராஜுவிட்டி என்றால் என்ன?: கிராஜுவிட்டி என்பது ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து நீண்ட காலமாக பணி புரியும் ஊழியர்களை கௌரவிக்கும் விதமாக நிறுவனம் வழங்கும் தொகையாகும். ஒரு நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறும் போது அவர்களுக்கு கொடுக்கப்படும் தொகையே கிராஜுவிட்டி தொகை என்று கூறப்படுகிறது. அரசு ஊழியர் ஆனாலும் சரி.. தனியார் ஊழியர் ஆனாலும் சரி ஒரே மாதிரியாகத்தான் கிராஜுவிட்டி கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.

கிராஜுவிட்டி பெற யார் தகுதியுடையவர்கள்?: ஒரு நபர் 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒரு நிறுவனத்தில் பணியாற்றி இருந்தால் அவர் கிராஜுவிட்டி பெற தகுதியுடையவர். ராஜினாமா அல்லது விருப்ப ஓய்வு பெற்றதன் காரணமாக நிறுவனத்தை விட்டு வெளியேறுபவர்களும் கிராஜுவிட்டி தொகையை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள். இறப்பு அல்லது ஊனமுற்ற சந்தர்ப்பங்களில் ஐந்தாண்டு சேவை பெற்ற ஊழியர்கள் அல்லது அதற்கு குறைவாக வேலை செய்த ஊழியர்களால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் கிராஜுவிட்டி பலனைக் கோரலாம்.
கிராஜுவிட்டி வழங்க வேண்டிய நிறுவனங்கள்: கிராஜுவிட்டி சட்டத்தின் கீழ் தொழிற்சாலைகள், சுரங்கங்கள், ஆயில் மில்கள், தோட்டங்கள், துறைமுகங்கள், ரயில்வே போன்ற நிறுவனங்கள் மற்றும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பணி புரியும் எந்த நிறுவனமாக இருந்தாலும் அங்கு ஊழியர்களுக்கு கிராஜுவிட்டி கொடுக்க வேண்டியது கட்டாயமாகும்.
எவ்வாறு கணக்கிடப்படுகிறது?: இதனை மிக எளிமையாக கணக்கிடலாம். உங்களுடைய அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றை சேர்ப்பதன் மூலம் நீங்கள் எளிதாக கிராஜுவிட்டியை கணக்கிடலாம். கிராஜுவிட்டியைக் கணக்கிட ஒரு ஃபார்முலா பயன்படுத்தப்படுகிறது.
கிராஜுவிட்டி = அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி x (15/26) x (நீங்கள் நிறுவனத்தில் வேலை பார்த்த ஆண்டுகளின் எண்ணிக்கை).
இதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம். ஒருவர் 9 வருடமாக ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் கடைசியாக பெற்ற சம்பளம் 50,000 எனில்,
கிராஜுவிட்டி தொகை = 50,000 x (15/26) x 9 = ரூ. 2,59,615.38-ஆக இருக்கும்.
ஒரு ஊழியரின் விசுவாசத்தை அங்கீகரித்து நிறுவனத்தால் கிராஜுவிட்டி தொகை வழங்கப்படுகிறது. ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் ஓய்வு பெறும்போது அல்லது நிறுவனத்தில் இருந்து ரிசைன் செய்யும்போது நிதி பாதுகாப்பாக இந்த தொகை விளங்குகிறது. அதுமட்டுமின்றி ஒரு நிறுவனத்தை பொறுத்தவரையில் ஊழியர்களின் அர்ப்பணிப்புக்கு ரிவார்டு கிடைக்கும் என்பதை அறிந்து ஊழியர்களை நீண்ட காலம் பணிபுரிவதற்கு இந்த கிராஜுவிட்டி தொகை ஊக்குவிக்கும்.


Click it and Unblock the Notifications