உலகின் முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாப்ட் இந்த வாரம் 2000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்திருக்கும் வேளையில் தற்போது 2 முக்கியமான தொழில்நுட்பத்தில் அனுபவம் கொண்டவர்களுக்கு சம்பளத்தை அளிக்கொடுக்க தயாராகியுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் டேட்டா சயின்டிஸ்ட் பணிகளுக்கு ஆண்டுக்கு 1.7 கோடி ரூபாயை ஊதியமாக வழங்க தயாராகியுள்ளது. இதன் மூலம் இத்தொழில்நுட்பத்திற்கு சந்தையில் எந்த அளவுக்கு டிமாண்ட் உள்ளது என்பது இதிலிருந்தே தெரிகிறது.

மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் முதன்மை மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் டேட்டா சயின்டிஸ்ட்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. எனவே இந்த நிறுவனங்கள் அதிக ஊதியம் கொடுத்து இந்த பிரிவில் ஆட்களை வேலைக்கு தேர்வு செய்கின்றன.
பிசினஸ் இன்சைடர் வெளியிட்டுள்ள தகவலின் படி மைக்ரோசாப்ட் நிறுவனம் முதன்மை மென்பொருள் பொறியாளர்களுக்கு (Principal Software Engineers) ஆண்டுக்கு 1.8 கோடி ரூபாய் ஊதியம் வழங்குவதற்கு தயாராக இருப்பது தெரிய வருகிறது.
அதேபோல மூத்த டேட்டா சயின்டிஸ்ட் பணிகளுக்கு ஆண்டுக்கு 1.7 கோடி ரூபாய் ஊதியமாக வழங்குவதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாராக இருக்கிறது. இந்த ஊதியம் தவிர இவர்களுக்கு நிறுவன பங்குகளும் வழங்கப்படும் என பிசினஸ் இன்சைடர் வெளியிட்டுள்ள தகவல் குறிப்பிடுகிறது.
தற்போது சர்வதேச அளவில் டேட்டா சயின்டிஸ்ட் மற்றும் சாப்ட்வேர் இன்ஜினியர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த துறையில் திறன் மிகுந்த மற்றும் அனுபவமிக்கவர்களுக்கு பல லட்சங்களை சம்பளமாக வாரி வழங்க நிறுவனங்கள் காத்திருக்கின்றன என்பதையே இது குறிப்பிடுகிறது.
ஆனால் மைக்ரோசாப்டில் வேலைவாய்ப்பு என்பது அத்தனை எளிதாக கிடைத்துவிடாது. பல போட்டிகள் நிறைந்ததாகவே இருக்கும். பல கட்ட நேர்காணல்களுக்குப் பின்னர் தான் தொழில்நுட்ப அடிப்படையிலான வேலைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பதாரர் கோடிங்கில் எவ்வளவு நிபுணத்துவம் பெற்றிருக்கிறார், ஒரு பிரச்சனையை தீர்ப்பதில் அவருடைய திறமை எவ்வாறு இருக்கிறது என்பன உள்ளிட்டவை ஐந்து நேர்காணல் நிலைகளில் தீர்மானிக்கப்படும். டேட்டா சைன்ஸ், கணிதம் மற்றும் மென்பொருள் பொறியியல் பிரிவுகளில் படிப்பை முடித்தவர்கள் இந்த பிரிவுகளில் சிறந்த துறை அனுபவம் கொண்டவர்களுக்கு நிச்சயம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
குறிப்பாக கூகுள் ,பேஸ்புக் போன்ற முன்னணி நிறுவனங்களில் வேலை செய்திருந்தவர்கள் என்றால் மைக்ரோசாப்ட் நிறுவனம் அவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குமாம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் கார்ப்பரேட் துணைத் தலைவர் பதவிக்கு ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. அதைப்போல ப்ரோக்ராம் மேனேஜ்மென்ட் பிரிவுகளில் ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுவதாக பிசினஸ் இன்சைடர் கூறுகிறது.
மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்களில் எப்படியாவது வேலை வாங்கி விட வேண்டும் என்பது தான் பலரது கனவாக இருக்கிறது. அதற்கு டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் நிபுணத்துவம் பெறுவது உதவியாக இருக்கும் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications