அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ், செப்டம்பர் 18 அன்று தனது நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை வெளியிட உள்ள நிலையில், சந்தை முதலீட்டாளர்கள் வட்டி விகிதம் குறைப்புக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த வட்டி விகிதத்தைக் குறைப்பை அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்க்கும் காரணத்தால் பல துறையில் இதன் தாக்கம் இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இன்றைய கூட்டத்தில் பென்ச்மார்க் வட்டி விகிதம் 25 அல்லது 50 அடிப்படை புள்ளிகள் வரையில் குறைக்கக் கூடும்.
CME FedWatch கருவி தற்போது 50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு 60% இருப்பதைக் காட்டுகிறது. இருப்பினும், முன்னணி பொருளாதார வல்லுநர்கள் தற்போதைய 5.25-5.50 சதவீதத்திலிருந்து 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கும் திசையில் தான் இருக்கும் என கணித்துள்ளனர்.

வட்டி விகிதம் குறைப்பின் தீவிரம் வரும் நாட்களில் பங்குச் சந்தையின் திசையைப் பாதிக்கும் என்பதால், உலகளாவிய நிதி சந்தைகள் Fed இன் முடிவைக் கவனமாகக் கண்காணித்து வருகின்றன. வட்டி விகிதம் குறைப்பு பெரும்பாலும் பணவீக்கம் அடிப்படையாகக் குறைக்கப்படும் போதிலும், பிற முக்கியமான காரணிகளும் இதில் கவனிக்கப்படும்.
வேலைவாய்ப்பு குறைந்து வருவதற்கான அச்சங்கள் அதிகரித்து வருவதால், பெரிய அளவிலான வட்டி விகிதம் குறைப்புக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இருப்பினும், பொருளாதார வல்லுநர்கள், அமெரிக்கப் பொருளாதாரத்தின் போக்கை பார்க்கும் போது வட்டி விகிதம் மெதுவாகக் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றனர். இதனால் பெடரல் ரிசர்வ் காலப்போக்கில் தனது வட்டி விகிதங்களை படிப்படியாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.
BoFA Global Research இன் அமெரிக்கப் பொருளாதார வல்லுநர் அதித்யா பாவே இதுகுறித்து பேசுகையில், செப்டம்பர் கூட்டத்தில் 25 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் குறைப்பு என்று கணித்துள்ளார். Fed அந்நாட்டின் வேலைவாய்ப்பு எண்ணிக்கை குறைந்து வரும் அபாயங்களைக் கவனமாகக் கண்காணிக்கிறது என்று அவர் வலியுறுத்துகிறார்.
மேலும், வட்டி விகிதம் குறைப்புகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுவதில்லை, சந்தை நிலவரங்களைப் பொருத்து தான் அனைத்தும் மாறுப்படுகிறது. இதன் மூலம் தற்போது அதிகளவில் வட்டி விகிதம் குறைக்காவிட்டாலும், வரும் கால நாணய கொள்கை கூட்டங்களில் கூடுதல் அளவிலான வட்டி விகிதம் குறைப்புகள் சாத்தியமாகும்.
50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் குறைப்புக்கு 16ஆம் தேதி துவங்கிய கூட்டத்தில் Federal Open Market Committee உறுப்பினர்களின் வாக்கு எண்ணிக்கை முக்கிய முடிவாக இருக்கும். பணவீக்கம் குறைந்திருந்தாலும், வேலைவாய்ப்பு சந்தை இன்னும் மோசமானதாகவே உள்ளது, என்பது தான் தற்போது அதிக வட்டி விகித குறைப்பிற்கு முக்கிய தடையாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications