நம் நாட்டில் பிரியாணிக்கு தனி ஃபேன்பேஸ் இருக்கத்தான் செய்கிறது. அதனாலோ என்னவோ தெருவுக்கு ஒரு பிரியாணி கடை வந்து விட்டது. ஆனால் திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி தரும் சுவைக்கு ஈடு இணை எதுவும் இல்லை. வீட்டில் சமைக்கப்படும் கைமணத்தில் உருவானது தான் திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி. பல தலைமுறைகள் கடந்து இன்று ஒரு சர்வதேச பிராண்டாக உருவாகி இருக்கிறது.
1957-ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் ஒரு சிறிய பீடா கடை நடத்தி வந்தவர் தான் நாகசாமி நாயுடு. ஆனால் இன்று நாகசாமி உலகளவில் சுமார் 100 திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி கிளைகளுடன் ஆண்டிற்கு ரூ.475 கோடி வருமானம் ஈட்டும் மாபெரும் சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பியிருக்கிறார். ஆனால் இந்த வளர்ச்சி அவருக்கு ஒரே இரவில் கிடைக்கவில்லை.

மனைவியின் மூலம் தொடங்கிய பயணம்: நாகசாமி நாயுடுவின் மனைவி முதன்முதலாக தனது வீட்டில் சுவையான பிரியாணியை தயாரித்தார். அந்த ரெசிபி தான் பிற்காலத்தில் திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணியாக உருவெடுத்தது. நல்ல வாசனையான மசாலாக்கள், திண்டுக்கல் கறி மற்றும் சேர்க்கும் மசாலாக்களை நன்றாக உறிஞ்சக்கூடிய சீரக சம்பா அரிசி ஆகியவற்றை பயன்படுத்தி நாகசாமி நாயுடுவின் மனைவி செய்த பிரியாணி ரெசிபி உள்ளூர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த பாரம்பரிய சுவையை வியாபாரமாக மாற்ற நினைத்தார் நாகசாமி. இதனால் 1957-ஆம் ஆண்டு "ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல்" என்ற உணவகத்தை தொடங்கினார். அந்த ஹோட்டலில் வெறும் நான்கு பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட முடியும்.
தலப்பாக்கட்டி பெயர் உருவாகக் காரணம் என்ன?: ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல் சிறியதாக இருந்தாலும் நாகசாமி மற்றும் அவருடைய மனைவி செய்த பிரியாணியின் சுவை ஊர் முழுக்க பரவியது. கல்லாவில் வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி மற்றும் தலையில் தலப்பாகையுடன் அழகாக அமர்ந்திருக்கும் நாகசாமியை எல்லோரும் பாராட்ட தொடங்கினர்.
ஹோட்டலின் அசல் பெயரை சொல்லாமல்.. அங்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் தலப்பாகட்டி கடை என்று அன்போடு அழைத்தனர். 1978-ஆம் ஆண்டு நாகசாமி நாயுடு மறைந்த பிறகு அவருடைய மகன் உணவகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மக்கள் வைத்த தலப்பாக்கட்டி பெயரை உணவகத்திற்கு வைக்கலாம் என்று முடிவெடுத்தார்.
அதற்கேற்ப "தலப்பாக்கட்டி ஆனந்த விலாஸ்" என பெயரை மாற்றினார். திண்டுக்கல் சமையல்காரர்களை கொண்டு கோயம்பத்தூரில் புதிய கடை திறக்கப்பட்டது. 2000-ஆம் ஆண்டில் நாகசாமி நாயுடுவின் பேரன் டி. நாகசாமி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு உணவக நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டார். இவர் இந்தியாவில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பட்டமும், லண்டனில் உள்ள தேம்ஸ் யுனிவர்சிட்டியில் ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் பட்டமும் பெற்றவர். அவர் குடும்பத் தொழிலில் இணைந்த பிறகு நிறுவனத்தின் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு சென்றது.
கொடைக்கானல் அருகில் உள்ள வத்தலகுண்டுவில் "திண்டுக்கல் தலப்பாக்கட்டி" என்ற பெயரில் உணவகத்தை தொடங்கினர். இந்த ஹோட்டல் தொடங்கப்பட்ட நாளிலிருந்து சுமார் 6 மாதங்களுக்குள் நாள் ஒன்றுக்கு 350 பிரியாணி பிளேட்டுகள் வரை விற்பனையானது. இதனால் திண்டுக்கல் தலப்பாக்கட்டி கிளையை சென்னையிலும் விரிவுபடுத்தினர்.
2008-ஆம் ஆண்டு சென்னை அண்ணா நகரில் புதிய கிளை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னையில் தொடங்கப்பட்ட ஹோட்டலுக்கு பெரிதாக வாடிக்கையாளர்கள் வரவில்லை. பின்னர் தலப்பாகட்டி ஹோட்டலின் லோகோவை வைத்து நிறைய விளம்பரங்கள் செய்து மக்களின் மனதில் இடம் பிடித்தனர்.
தலப்பாக்கட்டி பிரியாணி பிராண்டின் வளர்ச்சியை பார்த்த பெரு நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்ய முன் வந்தன. இதில் 2019-ஆம் ஆண்டில் சிஎக்ஸ் பார்ட்னர் என்ற பிரைவேட் நிறுவனம் ஒன்று சுமார் 50.1 சதவீத பங்குகளை ரூ. 260 கோடி கொடுத்து வாங்கியது.
அப்போது நிறுவனத்தின் மதிப்பு ரூ. 519 கோடியாக உயர்ந்தது. அதை தொடர்ந்து QRG இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்ஸ், ட்ரீ லைன் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் போன்ற நிறுவனங்கள் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்தனர். இதனால் 2021-ஆம் ஆண்டு தலப்பாக்கட்டி பிரியாணி பிராண்டின் சந்தை மதிப்பு 103 மில்லியன் டாலரை எட்டியது.
அதாவது இந்திய மதிப்புக்கு ரூ. 980 கோடி. 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சேலத்தில் 100-வது கிளை வெற்றிகரமாக தொடங்கப்பட்டது. டிராக்சன் தரவுகளின் அடிப்படையில் 2025-ஆம் ஆண்டின் மார்ச் 31 நிலவரப்படி திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி சுமார் 475 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. 2024-ஆம் நிதியாண்டைக் காட்டிலும் சுமார் 16 சதவீத வளர்ச்சியாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் நிறுவனத்தின் வருவாய் ஒவ்வொரு ஆண்டும் 18 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதேபோல 5 ஆண்டுகளில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது.
இன்றளவும் நாகசாமி நாயுடுவின் மனைவி அன்போடு சமைத்த அந்த ரெசிபி தான் வாடிக்கையாளர்களின் மனதை கவர்ந்து வருகிறது. பல தலைமுறைகள் கடந்தும் சீரக சம்பா பிரியாணியின் மனம் மாறாமல் வழங்கி வருகின்றனர். ஒரு சிறிய பீடா கடையை கூட உலகளாவிய பிராண்டாக மாற்ற முடியும் என்பதற்கு நாகசாமி நாயுடு ஒரு சிறந்த உதாரணம்.


Click it and Unblock the Notifications
