இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து இருக்கிறது. இதன் மூலம் 5.50 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் தற்போது 5.25 சதவீதம் என குறைந்திருக்கிறது . ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு நற்செய்தி.
ரெப்போ வட்டி விகிதம் குறையும் போதெல்லாம் வங்கிகளில் நம் கடன்களுக்கான வட்டி தொகை குறையும். அதுவே ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். வங்கிகளில் நாம் செய்யும் ஃபிக்ஸடு டெபாசிட்களுக்கும் இதே நிலைமை தான். ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால் வங்கிகளில் நம் ஃபிக்ஸடு டெபாசிட்களுக்கான வட்டியும் குறையும்.

ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட உடனே வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன், தங்க நகை கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும். நம்முடைய மாதாந்திர ஈஎம்ஐ தொகை குறையும். வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு ரெப்போ வட்டி விகித குறைப்பு என்பது மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைந்திருக்கிறது .ஆனால் இந்த ரெப்போ வட்டி விகித குறைப்பு வங்கிகளில் எஃப்டி போன்ற திட்டங்களில் பணத்தை டெபாசிட் செய்பவர்களுக்கு கெட்ட செய்தியாக தான் அமைந்திருக்கிறது.
எப்படி வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்குமோ அதேபோல டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தையும் குறைக்கும். எனவே வங்கிகளில் எஃப்டி திட்டங்களில் பணத்தை போட்டு வைத்து அதிக வட்டி பெறலாம் என்பது இனி நடக்காத காரியம். சில வங்கிகள் உடனே டெபாசிட் திட்டங்களுக்கான வட்டியை குறைக்கும், சில வங்கிகள் ஒன்று இரண்டு மாதங்களில் குறைக்கும்.
2025ஆம் ஆண்டு தொடக்கம் முதல் ரிசர்வ் வங்கி 1.25 சதவீதம் வரை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. ஏற்கனவே பல்வேறு வங்கிகளும் டெபாசிட் திட்ட வட்டிகளை குறைத்துவிட்டன. 60 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சராசரியாக 6 முதல் 7 சதவீதம் வரை தான் வட்டி கிடைக்கின்றன.
7 சதவீத வட்டி கூட நீண்ட கால முதலீட்டு திட்டங்களுக்கே கிடைக்கின்றன. இனி இந்த வட்டியும் குறைய போகிறது. ஏற்கனவே எஃப்டி திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு பிரச்சினை இல்லை. ஏனெனில் நீங்கள் முதலீடு செய்யும் போது அமலில் இருந்த வட்டி உங்களுக்கு கிடைக்கும். ஆனால் புதிதாக முதலீடு செய்பவர்களுக்கு தான் குறைந்த வட்டி கிடைக்க போகிறது.
குறிப்பாக குறுகிய கால டெபாசிட் திட்டங்களின் வட்டியை தான் வங்கிகள் முதலில் குறைக்கும். எனவே குறுகில கால திட்டங்களில் டெபாசிட் செய்யும் எண்ணம் இருந்தால் உடனே செய்துவிடுங்கள், இப்போதுள்ள வட்டி விகிதத்தை லாக் இன் செய்துவிடலாம். சிலர் அதிக வட்டி கிடைக்கிறது என்பதற்காக ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளில் சென்று மாட்டி கொள்ள கூடாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications