இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிரான பயணம் கடந்த ஒரு 10 வருடத்தில் பெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளது. பல்வேறு உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார காரணிகளால் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
2010 ஆம் ஆண்டின் முற்பகுதியில், ரூபாய் மதிப்பு ஒப்பீட்டளவில் நிலையானதாக இருந்தாலும் உலகளாவிய பொருளாதாரத்தில் ஏற்றப்பட்ட தடுமாற்றம், அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை, உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை மற்றும் உள்நாட்டுப் பணவீக்க அழுத்தங்கள் போன்ற காரணிகள் ரூபாயின் மதிப்பைக் குறைக்கத் தொடங்கின. 2013 ஆம் ஆண்டில், ரூபாய் பெரிய அளவில் தனது மதிப்பை இழந்து வரலாற்றுச் சரிவை எட்டியது.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), வட்டி விகிதங்களை உயர்த்துதல் மற்றும் வெளிநாட்டுப் பரிவர்த்தனை விதிமுறைகளை மறுசீரமைப்பு செய்வது வாயிலாக ரூபாய் மதிப்பின் சரிவைக் கட்டுப்படுத்தினாலும் பல முறை கைகொடுக்காமல் போயுள்ளது. இப்படிப்பட்ட தருணம் தான் தற்போது நடந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாறு காணாத விதமாக 85.06 என்ற அளவை தொட்டது. இந்த மோசமான வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது 2 நாள் நாணய கொள்கை முடிவில் அந்நாட்டின் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் வரையில் குறைத்தது தான்.
2013ஆம் ஆண்டுக்கு பின்பு அடுத்தடுத்த ஆண்டுகளில் ரூபாய் தொடர்ந்து சவால்களை எதிர்கொண்டது. 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட போர் பதற்றங்கள் ரூபாய் மதிப்பின் நிலைமையை மோசமாக்கின.
இதேவேளையில் இந்தியாவில் உற்பத்தித் துறை புது வேகத்தை எட்டிய காரணத்தால் இறக்குமதிகளுக்கு அதிக முதலீடு செய்யப்பட வேண்டிய கட்டாயம் உருவானது. இதேபோல் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கும் டாலர்களுக்கான தேவை அதிகரித்தது, இதனால் ரூபாய் மதிப்பு கூடுதல் பாதிப்புகளை எதிர்கொண்டது.

இந்தியப் பொருளாதாரம் கடந்த சில வருடங்களாக மீண்டு வரும் காரணத்தால் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்து டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு நிலைதன்மையை எட்டியுள்ளது. மேலும் மத்திய மாநில அரசுகள் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த நடவடிக்கைகள் மற்றும் நிலையான உலகளாவிய பொருளாதார சூழல், ரூபாயை வலுப்படுத்த உதவியுள்ளது. ஆனால் கடந்த ஒரு வருடமாக உலகளாவிய பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு, அடுத்தடுத்து உலக நாடுகளில் நடந்த தேர்தல்கள், போர் பதற்றங்கள் ஆகியவை ரூபாய் மதிப்பை மீண்டும் சரிவு பாதைக்கு தள்ளியது.
ரூபாயின் மதிப்பு பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்பட்டாலும், உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் டாலர் ஆதிக்கத்தில் இருந்து மீண்டு வருவதில் தான் ரூபாய் மதிப்பின் மீட்சி அடையும் அளவுகள் உள்ளது.


Click it and Unblock the Notifications