சிறுவயதிலேயே குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் மனநிலை எல்லா சிறுவர்களுக்கும் வந்துவிடாது. ஆனால் தன்னுடைய 16-வது வயதிலேயே அப்படி ஒரு பிரச்சினையை எதிர்கொண்டார் ஒரு நபர். அப்போது அவருடைய குடும்பத் தொழிலும் கடும் நஷ்டத்தில் இருந்தது. இந்த சிறுவனும் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய நிலை. ஒரு சிறுவனாக யோசிக்கும் போது பலரும் இந்த சூழ்நிலையை பார்த்து பயந்து ஓடி இருப்பார்கள்.
ஆனால் அந்த 16 வயது சிறுவன் அதற்கெல்லாம் அஞ்சவில்லை. படிப்பை பாதியில் நிறுத்தினாலும் தன்னுடைய குடும்பத் தொழிலான பால் வியாபாரத்தில் களம் இறங்கினார். அவர் வேறு யாருமில்லை மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் நிறுவனர் சதிஷ் குமார்.
தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். 1980-களில் அவருடைய தந்தையும், சித்தப்பாவும் சேர்ந்து சிறிய விசைத்தறி நிறுவனத்தை நடத்தி வந்தனர். ஆனால் அந்த நிறுவனமும் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் தரவில்லை. இதனால் சில ஆண்டுகளிலேயே அதை இழுத்து மூடினர். அதன் பிறகு குடும்பமாக சேர்ந்து பால் வணிகத்தில் ஈடுபட தொடங்கினர்.

உள்ளூர் டிஸ்ட்ரிபியூட்டர்களிடமிருந்து பால் வாங்கி அதை ரெஃப்ரிஜிரேட் செய்து தினமும் 3000 லிட்டர் பாலை பெங்களூருக்கு கொண்டு சென்றனர். இப்படி செய்தால் லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அந்த குடும்பத்திற்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. இதிலும் பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை. இதனால் 1990-ஆம் ஆண்டு அவருடைய சித்தப்பா இந்த தொழிலில் இருந்து விலகினார். 1992-ஆம் ஆண்டில் பால் வியாபாரத்தையும் முற்றிலுமாக கைவிட்டனர்.
அப்போது மீண்டும் சதீஷ்குமார் பால் வியாபாரத்தில் களமிறங்கினார். அந்த சமயத்தில் அவருக்கு வயது 16. தொழிலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக படிப்பை பாதியில் நிறுத்தினார். 1990-களில் அவர்கள் பெங்களூருக்கு பால் வியாபாரம் செய்த போது அங்குள்ள ஒரு வாடிக்கையாளர்கள் இவர்களிடமிருந்து பால் வாங்கி பன்னீர் தயாரித்து ஹோட்டல்களுக்கு விற்பனை செய்து வந்ததை சதீஷ்குமார் பார்த்திருக்கிறார்.
இதை வைத்து அவருக்கு ஒரு பிசினஸ் ஐடியா தோன்றியது. ஆனால் அவருடைய குடும்பத்தில் யாருக்கும் பன்னீர் செய்ய தெரியாது. அந்த சமயத்தில் கூகுள், யூடியூப் பெரிதாக பிரபலமாகாத காலம். இதனால் பலமுறை முயற்சி செய்தும் அவருக்கும் தோல்விதான் மிஞ்சியது. இறுதியாக சுயமாக பன்னீர் தயாரிக்கக் கற்றுக் கொண்டார். ஆரம்ப கட்டத்தில் பலமுறை பால் வீணானது.
அதையெல்லாம் கண்டு சதீஷ் மனம் தளரவில்லை. சரியான தரம் மற்றும் பதத்தை கண்டுபிடிக்க பலமுறை போராடினார். 1993-ஆம் ஆண்டு 10 கிலோ பன்னீர் செய்து பெங்களூருக்கு எடுத்துச் சென்றார். அங்குள்ள ஹோட்டல்களில் அதை விற்பனை செய்தார். 1995-ஆம் ஆண்டுக்குள் அவருடைய வியாபாரம் சிறுக சிறுக வெற்றிக் காணத் தொடங்கியது.
ஆரம்பத்தில் 50 கிலோ பன்னீர் வரை விற்பனையானது. நாட்கள் செல்ல செல்ல ஒவ்வொரு நாளும் 100 கிலோ வரை விற்பனை செய்தார். இதனால் பால் விற்பனையை முழுமையாக நிறுத்திவிட்டு.. பால் முழுவதையும் பன்னீராக தயாரித்து விற்பனை செய்ய முடிவு எடுத்தார்.
இதுவே மில்கி மிஸ்ட் பிராண்ட் உருவாக காரணமாக அமைந்தது. பாலாக விற்பனை செய்யும் போது மறுநாள் வைத்து விற்பனை செய்ய முடியாது. சீக்கிரம் கெட்டுப் போய்விடும். அதுவே பன்னீராக மாற்றினால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டே சதீஷ் பன்னீர் வியாபாரத்தில் காலடி எடுத்து வைத்தார்.
காலப்போக்கில் தயிர், வெண்ணெய், நெய் யோகர்ட், ஐஸ்கிரீம் என பல வகையான பொருட்களை இந்நிறுவனம் தயரிக்கத் தொடங்கியது. இன்று SmartChef, Capella மற்றும் Misty Lite போன்ற பிற பிராண்டுளையும் நடத்தி வருகிறது.
1997 ஆம் ஆண்டில் மில்கி மிஸ்ட் பிராண்ட் மக்கள் மத்தியில் தெரிய வந்தது. 2007-ஆம் ஆண்டில் லோகோ செய்து வெளியிட்டனர். சிறுக சிறுக சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் போன்ற நகரங்களுக்கும் மில்கி மிஸ்ட் பிராண்டின் பொருட்கள் அனுப்பப்பட்டது.
பால் பொருட்கள் என்பதால் விரைவில் கெட்டுப் போய்விடும் என்பதற்காகவே குளிர் பதன பெட்டிகள், குளிர்சாதன வசதியுடைய வாகனங்களில் அதிக முதலீடு செய்து நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சதீஷ் வித்திட்டார். 2010-ஆம் ஆண்டில் நிறுவனம் முதல் முறையாக தொலைக்காட்சி விளம்பரத்தில் தோன்றியது.
அதன் பிறகு 2018-ஆம் ஆண்டில் வியாபாரம் அதிகரிக்கவே ரோபோடிக் தொழில்நுட்பத்தை கொண்டு பன்னீர் மற்றும் தயிர் பேக்கிங் செய்யப்பட்டது. 2019-ஆம் ஆண்டில் சீஸ் தயாரிப்பு ஆலையையும் சதீஷ் அமைத்தார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக பால் பொருட்களை மட்டுமே விற்பனை செய்து.. தற்போது ரூ.1553 கோடி ஐபிஓ வெளியீட்டின் மூலம் பங்குச்சந்தையிலும் காலடி எடுத்து வைத்துள்ளது. இந்நிறுவனத்தின் மதிப்பு தற்போது ரூ.10,778 கோடியை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
