ரத்தன் டாடா உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவர். டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாடா அவரது நன்கொடை நடவடிக்கைகளுக்காக அடிக்கடி செய்திகளில் இடம் பெறுவார். கடந்த இரண்டு ஆண்டுகளில், நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் ஆர்வத்தைப் பெற்ற ஒரு இளைஞருடன் ரத்தன் டாடா அடிக்கடி காணப்பட்டார்.
அந்த இளைஞர் பெயர் சாந்தனு நாயுடு. பில்லியனர் ரத்தன் டாடாவின் நெருங்கிய உதவியாளர்களில் ஒருவர். சாந்தனு நாயுடு ரத்தன் டாடாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் வீடியோ வைரலான பிறகு முதலில் பொது வெளியில் அறியப்பட்டார்.

அப்போதிருந்து, சாந்தனு நாயுடு தொழில்துறையில் பிரபலமாகிவிட்டார். ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்குக் குழந்தைகள் இல்லை என்றாலும், அவர் சாந்தனுவை எப்போதும் தனது மகனைப் போலவே நடத்தினார்.
சாந்தனு நாயுடுவுக்கு 29 வயது, அவர் மே 2022 இல் ரத்தன் டாடாவிடம் பணியாற்றத் தொடங்கினார். சாந்தனு நாயுடு புனேவில் பிறந்து வளர்ந்தவர். 2014 ஆம் ஆண்டில் புனே பல்கலைக்கழகத்தில் இஞ்சினியரிங் பட்டப்படிப்பை முடித்தார்.
அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டில் கார்னல் ஜான்சன் கிராஜுவேட் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்டில் மாஸ்டர் இன் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படித்தார். பட்டப்படிப்பு முடித்த பின்னர் டாடா எல்க்ஸி நிறுவனத்தில் ஆட்டோமொபைல் டிசைன் இஞ்சினியராக புனேவில் வேலைக்கு சேர்ந்தார்.
தான் சாலையைக் கடந்து வரும்போது ஏராளமான நாய்கள் வேகமாகச் செல்லும் வாகனங்களில் அடிபட்டு இறந்து கிடந்ததைப் பார்த்ததாக சாந்தனு நாயுடு கூறினார். இப்படி நாய்கள் வாகனங்களில் அடிபட்டு சாவதைத் தடுக்க சாந்தனு நாயுடு ஒரு நடவடிக்கையை எடுத்தார்.
அதன்படி நாய்களுக்கு காலர்களை தயாரித்து அணிவித்தார். இதனால் இரவில் கூட நாய்களைக் கண்டுகொள்ளும்படி அந்த காலர் ஒளிரும்படி அமைத்தார். தனது இந்த ஐடியாவுக்கு முதலீட்டு ஆதரவு கேட்டு சாந்தனு நாயுடு, ரத்தன் டாடாவுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
ஆச்சரியப்படும்வகையில் நாயுடுவை தன்னை வந்து சந்திக்கும் படியும் பிசினஸ் குறித்து பேசலாம் என்று பதில் அனுப்பினார்.
இரண்டு நாய் விரும்பிகளின் சந்திப்பு நாயுடுவுக்கு ஒரு வேலையைப் பெற்றுத் தந்தது. ரத்தன் டாடாவின் உதவியாளராக வேலைக்கு சேர்ந்தார் நாயுடு. அவரை பொதுமேலாளராக ரத்தன் டாடா நியமித்தார். அதைத் தொடர்ந்து நாயுடு மூத்த குடிமக்களுக்கு உதவும் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5 கோடி ஆகும்.
நாய்களுக்கு காலர் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தையும் சாந்தனு நாயுடு நடத்தி வருகிறார். அதற்கான மூலதனத்தை ரத்தன் டாடா அவருக்கு அளித்தார்.


Click it and Unblock the Notifications