ஐடி உள்ளிட்ட பெரும்பாலான துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்த தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக மனிதர்கள் தங்களுடைய வேலை வாய்ப்புகளை இழந்து வருகின்றனர்.
குறிப்பாக மென்பொருள் துறையில் இருப்பவர்களின் வேலை வாய்ப்புகளை ஏஐ பறித்த வண்ணம் இருக்கிறது. இந்த சூழலில் சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, மென்பொருள் மேம்பாட்டாளர்கள் ஏஐ தொழில்நுட்பத்தை பின்னுக்கு தள்ள வேண்டும் என்றால் இந்த ஒரு திறன் அவர்களிடம் இருந்தால் போதும் என தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள பதிவில் வடிவங்களை கண்டுபிடிப்பதும் அவற்றை பொருத்தமான முறையில் பயன்படுத்துவதையும் தான் மென்பொருள் மேம்பாடு என அழைக்கிறோம் எனக் கூறியுள்ளார். நாம் கண்டுபிடிக்கக்கூடிய இந்த வடிவங்கள் பெரியதாகவும் சிக்கலானதாகவும் தொடர்ந்து மாற்றம் அடைந்து கொண்டே இருக்கின்றன, இந்த வடிவங்களின் அளவு மற்றும் சிக்கல் தன்மைக்கு தர்க்கரீதியான முடிவு கிடையாது எனக் கூறியிருக்கிறார்.
நல்ல புரோகிராமர்கள் பல்வேறு வடிவங்களை கற்றுக்கொண்டு அவற்றை சரியான முறையில் பயன்படுத்துகிறார்கள் இது சாதாரண விஷயம் கிடையாது எனக் கூறியிருக்கிறார். சிறந்த புரோகிராமர்கள் அழகான புதிய வடிவங்களை கண்டுபிடிக்கிறார்கள் இதுவும் சாதாரணமான விஷயம் கிடையாது என சுட்டிக்காட்டி இருக்கிறார். தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மென்பொருள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நுழைந்து இருந்தாலும் அந்த தொழில்நுட்பம் ஏற்கனவே நாம் கண்டுபிடித்த வடிவங்களை எடுத்து பயன்படுத்தி மற்றும் பரிந்துரைப்பதில் தான் திறன் பெற்றதாக இருக்கிறது என கூறியுள்ளார்.
ஒரு வடிவத்தை பொருத்தமான இடத்தில் பயன்படுத்துவது குறித்த முடிவு எடுக்கும் திறன், ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணக்கூடிய திறன் இன்னும் மனிதர்களாகிய நம்மிடம் தான் இருக்கிறது என கூறியிருக்கிறார் .செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மனிதர்களுக்கு நிகரான புதிய வடிவங்களை கண்டுபிடித்து விட முடியாது என தெரிவித்துள்ளார். ஏஐ தொழில்நுட்பம் எந்த ஒரு மாற்றத்தை கொண்டு வந்தாலும் புதிய கண்டுபிடிப்பு என்பது மனிதர்களிடம் மட்டுமே இருக்கிறது என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
அவருடைய இந்த பதிவுக்கு பலரும் தங்களுடைய எதிர்வினைகளை பதிவு செய்திருக்கின்றனர். ஒரு பயனர் எதிர்காலத்தில் புரோகிராமர்கள் கோடிங் உள்ளிட்ட வேலைகளுக்கு முழுவதுமாக ஏஐ தொழில்நுட்பத்தை சார்ந்து இருக்கக்கூடிய ஒரு சூழல் உண்டாகும் போது என்ன நடக்கும் என கேட்டதற்கு ஸ்ரீதர் வேம்பு பதில் அளித்திருக்கிறார். கலை மற்றும் இசையை போல புதிய புதிய விஷயங்களை உருவாக்கக்கூடிய திறன் படைத்தவர்கள் தான் மனிதர்கள் எனவே புதிய வடிவங்களை கண்டுபிடிக்கும் அந்த ஒரு திறன் இருந்தால் போதும் ஏஐ தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் மனிதர்களால் அதில் நீடித்து நிலைக்க முடியும் என கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications