உலக அளவில் தற்போது தோல் அல்லாத காலணிகளுக்கான தேவையும் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இப்படிப்பட்ட தோல் இல்லாத காலணிகள் உற்பத்தியில் தைவான் நாட்டை சேர்ந்த நிறுவனங்கள்தான் முன்னிலையில் இருக்கின்றன. உலகின் பல்வேறு முன்னணி பிராண்டுகளுக்கு தேவையான தோல் அல்லாத காலணி பொருட்கள் பெரிய அளவில் தைவான் நாட்டில் தான் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் தைவானுக்கு அடுத்தபடியாக தோல் இல்லாத காலணி பொருட்கள் உற்பத்தி மையமாக இந்தியா மாறி வருகிறது. இதில் தமிழ்நாடு தான் முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாடு அரசு தோல் இல்லாத காலணி உற்பத்தியில் தமிழ்நாட்டு முதல் இடத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பதில் தீவிரமாக இயங்கி வருகிறது. இதற்காக தைவான் நாட்டை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகளை நிறுவும்படி வலியுறுத்தி வருகிறது.

அந்த வகையில் தைவான் நாட்டை சேர்ந்த hong fu என்ற காலணி தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாட்டில் பனப்பாக்கத்தில் தன்னுடைய மிகப்பெரிய காலணி உற்பத்தி ஆலையை கட்டி வருகிறது . உலகின் முன்னணி பிராண்டுகளுக்கு தேவையான ஸ்னிக்கர் ரக காலணிகளை இந்நிறுவனம் தான் உற்பத்தி செய்து வழங்குகிறது. ஒரு ஆண்டுக்கு இந்த நிறுவனம் 200 மில்லியன் ஜோடி ஸ்போர்ட்ஸ் ஷூக்களை உற்பத்தி செய்கிறது.
இந்த நிறுவனம் முதன்முறையாக தைவானுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் மிகப்பெரிய உற்பத்தி ஆலையை நிறுவி வருகிறது. தைவான் நிறுவனத்தின் இந்த உற்பத்தி ஆலைக்கான கட்டுமான பணிகள் பனப்பாக்கம் பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த ஆலை கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார். ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் இருக்கும் சிப்காட்டில் இந்த உற்பத்தி ஆலை நிறுவப்பட்டு வருகிறது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இது முழுமையாக பயன்பாட்டுக்கு வந்து விடும் என இந்த நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த ஆலையில் தோல் அல்லாத காலணி பொருட்கள் மற்றும் தடகள வீரர்களுக்கு தேவையான காலணி பொருட்கள் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில் 25 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் இதில் 85 சதவீத வேலை வாய்ப்புகள் பெண்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.
தற்போது பனப்பாக்கத்தில் கட்டப்பட்டு வரக்கூடிய இந்த ஆலை முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தால் ஒரு ஆண்டுக்கு இங்கே 25 மில்லியன் ஜோடி காலணிகள் உற்பத்தி செய்யப்படும் என சொல்லப்படுகிறது. தோல் சார்ந்த காலணி உற்பத்தி மையமாக திகழ்ந்து வந்த தமிழ்நாடு தற்போது தோல் சாராத காலணி பொருட்களின் உற்பத்தி மையமாகவும் மாறி வருகிறது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
மத்திய அரசும் கூட இந்தியாவில் தோல்சாராத காலணி பொருட்கள் உற்பத்திக்கு ஊக்கமளித்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது ஸ்னிக்க்கர் போன்ற காலணி உற்பத்தியில் ஈடுபடும் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாக பிபிசி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது. புதுமையான தொழில்நுட்பங்களுடன் இந்தியா கால சூழல்களுக்கு தேவையான அதே வேளையில் மிடில் கிளாஸ் மக்களும் வாங்கி பயன்படுத்தக்கூடிய விலையில் காலணிகளை உற்பத்தி செய்து வழங்க போட்டி அதிகரித்திருப்பதால் இந்த துறையில் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications