மும்பை: ரத்தன் டாடா தன்னுடைய டாடா நிறுவனங்கள் வாயிலாக பல உதவிகளை செய்துள்ளார். குறிப்பாக டாடா அறக்கட்டளைகள் பலதுறைகளில் நன்கொடை வழங்கி அவற்றின் வளர்ச்சிக்கு உதவி வருகின்றன. குறிப்பாக பல துறை விளையாட்டு வீரர்களை ஸ்பான்சர் செய்து வளர்த்துவிட்டுள்ளன. இதனால் தான் நாடே அவரது மறைவை எண்ணி வருந்துகிறது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் அவர்களது கிரிக்கெட் வாழ்க்கை மலர்வதற்கு உதவிகரமாக இருந்துள்ளார் ரத்தன் டாடா.
தொழிலதிபராக மட்டுமல்லாமல் விலங்குகள் மீதான காதல் மற்றும் விளையாட்டுகள் மீதான விருப்பங்களை செயல்பாடுகளின் மூலம் வெளிப்படுத்தியவர் தான் ரத்தன் டாடா. குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிப்பதில் விருப்பம் கொண்டவர்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தடகள வீரர்கள் ஏராளமானவர்களுக்கு இவர் அவர்களுடைய திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு உதவியுள்ளார். அந்த வகையில் தற்போது களத்தில் இருக்கும் மற்றும் ஓய்வு பெற்ற பல கிரிக்கெட் வீரர்களும் டாடா குழுமத்தின் உதவியை பெற்றவர்களாக இருக்கின்றனர். அது வேலை வாய்ப்புகளாக இருக்கட்டும் அல்லது நிதி ரீதியிலான ஆதரவாக இருக்கட்டும் அல்லது வாய்ப்புகளை பெற்று தருவதாக இருக்கட்டும், பல கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்திருக்கிறது டாடா குழுமம்.
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஃபரோக் இன்ஜினியர் டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் ஸ்பான்சரை பெற்றவர். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இவருக்கு பயிற்சி பெறுவது என்பன உள்ளிட்ட பல வழிகளில் உதவிக்கரம் நீட்டி உள்ளது. அதேபோல மொஹிந்தர் அமர்நாத், சஞ்சய் மஞ்ச்ரேகர், ராபின் முத்தப்பா மற்றும் டிவிஎஸ் லக்ஷ்மன் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஏர் இந்தியா நிறுவனத்தின் ஸ்பான்சரை பெற்றவர்கள் தான்.
அதுமட்டுமின்றி ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் மற்றும் முகமது கைஃப் ஆகிய வீரர்களும் டாடா குழுமத்தின் மூலம் பல வகையான உதவிகளையும் பெற்று தான் கிரிக்கெட் உலகில் கால் பதித்தனர். டாடா பவர் நிறுவனத்தின் உதவியை பெற்றவர் ஷர்துல் தாகுர், ஜெயந்த் யாதவ் ஏர் இந்தியா நிறுவனத்தின் உதவியை பெற்றவர். அதேபோல பிசிசிஐ நிறுவனத்தின் தலைமை தேர்வாளராக இருப்பவரும் முன்னாள் வீரருமான அஜித் அகர்கர் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் உதவினால்தான் இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்தார்.
ஐபிஎல் போட்டிகளுக்கான தலைப்பு உரிமத்தை கூட டாடா நிறுவனம் தான் கையகப்படுத்தியுள்ளது. இதற்கான ஸ்பான்சர்ஷிப்பாக பல கோடி ரூபாயை டாடா குழுமம் பிசிசிஐக்கு செலுத்தியுள்ளது.
Written by: Devika


Click it and Unblock the Notifications