நாட்டில் பல்வேறு பகுதிகளில் போலியான ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிக்கும் செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு அதிக அளவில் பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டுகளில் 500 ரூபாய் நோட்டு தான் முதன்மையாக உள்ளது. இந்நிலையில் நிதியமைச்சகம் போலியான 500 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சகத்தின் அறிக்கையின்படி கடந்த 5 ஆண்டுகளில் போலி 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 317 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி 2018 முதல் 2019-ஆம் நிதியாண்டில், போலி 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 21,865 மில்லியனாக இருந்தது. இது 2022 முதல் 2023-ஆம் நிதியாண்டில் 91,110 மில்லியனாக அதிகரித்துள்ளது. இருப்பினும் 2023 முதல் 2024 ஆம் நிதியாண்டில் 15 சதவீதம் கள்ள நோட்டுகள் குறைந்து 85,711 மில்லியனாக உள்ளது.

2021 முதல் 2022-ஆம் நிதியாண்டில் போலி ரூ.500 நோட்டுகளில் மிக அதிகமான ஆண்டு அதிகரிப்பு காணப்பட்டது. ஏனெனில் 2020-ஆம் நிதியாண்டில் இருந்ததை விட கள்ள நோட்டுகளின் புழக்கம் 12 சதவீதம் அதிகரித்து 79,669 மில்லியனாக உயர்ந்தது. இது 2020 ஆம் நிதியாண்டில் 39,453 மில்லியனாக இருந்தது.
போலி 500 ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண்பது எப்படி?: யார் வேண்டுமானாலும் உங்களிடம் 500 ரூபாய் நோட்டுகளை வழங்கலாம். சில நேரங்களில் அவை பார்ப்பதற்கு உண்மையான நோட்டுகள் போலவே தோன்றும். ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி உண்மையான 500 ரூபாய் நோட்டில் என்னென்ன விஷயங்கள் இருக்கும் என்பதை பின்வருமாறு பார்ப்போம். இதை வைத்து நீங்கள் உண்மையான நோட்டுகளை அடையாளம் காண முடியும்.
உண்மையான 500 ரூபாய் நோட்டின் அளவு 6 மிமீ x 150 மிமீ இருக்கும். "500" என்ற மதிப்பு தேவ நாகரியில் அச்சிடப்பட்டிருக்கும். மகாத்மா காந்தியின் உருவப்படம் நடுவில் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும்.
மேலும் "பாரத்" மற்றும் "இந்தியா" என்ற வார்த்தை மைக்ரோ எழுத்துக்கள் மூலம் எழுதப்பட்டிருக்கும். பணத்தின் நடுவில் ஒரு நூல் இலை கொடுக்கப்பட்டிருக்கும். பணத்தை ஆட்டி பார்க்கும்போது பச்சை நிறத்திலிருந்து நீல நிறமாக அந்த நூல் இலை மாறும். இதே போன்ற நூல் இலை ஒவ்வொரு பணத்திலும் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் அவற்றின் நிறம் மாறுபடும்.
வாட்டர் மார்க்கில் மகாத்மா காந்தியின் உருவப்படம் தெரியும். அதே போல 500 என்ற எழுத்தும் கொடுக்கப்பட்டிருக்கும், அசோகா தூண் வலது புறம் இருக்கும். நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டு இடதுபுறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த அம்சங்களை எல்லாம் வைத்து உண்மையான மற்றும் போலியான நோட்டுகளை எளிதாக அடையாளம் காண முடியும்.


Click it and Unblock the Notifications