இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். அப்படி 2025-ஆம் நிதி ஆண்டிற்கான ITR கணக்கை தாக்கல் செய்யும் நேரம் வந்துவிட்டது. அதற்கான புதிய படிவங்களை சமீபத்தில் வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. ITR 1 முதல் ITR 5 வரையிலான புதிய படிவங்கள் இனி இ-ஃபைலிங் போர்ட்டலில் கிடைக்கும். இதனால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது மிகவும் எளிதாகும்.
நீங்கள் ITR தாக்கல் செய்வதற்கு முன்பு பழைய வரி முறையைத் தேர்வு செய்ய இருக்கிறீர்களா? அல்லது புதிய வரி முறையைத் தேர்வு செய்ய இருக்கிறீர்களா? என்பதைத் தீர்மானிக்க வேண்டும். எந்த வரி முறையைத் தேர்ந்தெடுப்பது உங்களுக்கு உதவிகரமானதாக இருக்கும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

குறைந்த வரி விகிதங்கள்: புதிய வழிமுறையின் கீழ் குறைந்த வரி விதிக்கப்படுகிறது. ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. அது என்னவென்றால் பழைய வரி முறையில் நீங்கள் பெறக்கூடியது போல் வரி விலக்குகளை கோர முடியாது. அதாவது, வரி விகிதங்கள் குறைவுதான், ஆனால் வரிச் சலுகைகலும் குறைவாக இருக்கலாம்.
வரி விலக்குகள்: பழைய வருமான வரி முறையின் கீழ் வருமான வரி செலுத்துபவர்கள், பிரிவு 80C, 80D, 80DD மற்றும் 80U போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வரி விலக்குகளைப் பெற முடியும். இது ஒருவரின் வரி விதிக்கக்கூடிய வருமானத்தைக் குறைக்க உதவுகிறது. ஆனால் இந்தப் புதிய வரி முறையில் பெரும்பாலான விலக்குகள் வழங்கப்படுவதில்லை.
வீட்டு வாடகைப்படி (HRA): நீங்கள் சம்பளம் பெறும் ஊழியராக இருந்து வீட்டு வாடகை படி பெற தகுதியுடையவராக இருந்தால்.. பழைய வரி முறையின் கீழ் பிரிவு 10(13A)-யின் படி வரி விலக்கு பெற முடியும். ஆனால் புதிய வரி முறையில் இது போன்ற சலுகைகள் கிடையாது.
ஹோம் லோன்: நீங்கள் வீட்டுக் கடன் பெற்று பழைய வரி விதிப்பு முறையைத் தேர்ந்தெடுத்திருந்தால் வட்டியை விலக்காக கோர முடியும். ஆனால் புதிய வரி முறையின் கீழ் இது போன்ற சலுகைகள் கிடைக்காது. ஈஎம்ஐ செலுத்தும் நபர்களுக்கு பழைய வரிவிதிப்பு சிறப்பான ஒன்றாக இருக்கும்.
வரியில் தள்ளுபடி: பிரிவு 87A-இன் கீழ் குறிப்பிட்ட வரம்புக்குள் வருமானம் பெறுபவராக இருந்தால் உங்களுடைய வரியை குறைக்கும் வரி தள்ளுபடியையும் பெற முடியும். பழைய வரி முறையில் இந்த வரம்பு ரூ. 5 லட்சமாக இருந்தது. ஆனால் புதிய வரி முறையில் 2025-ஆம் ஆண்டு பட்ஜெட்டுக்கு பிறகு ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது நடுத்தர வருவாய் ஈட்டும் நபர்களுக்கு அதிக நிவாரணத்தை வழங்கக்கூடும்.
ஸ்டாண்டர்ட் டிடக்சன்: நிலையான கழிவு என்று சொல்லப்படும் ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் பழைய வரி முறையின் கீழ் ரூ. 50,000-ஆக இருந்தது. ஆனால் 2024-ஆம் ஆண்டு முதல் இந்தத் தொகை ரூ. 75,000-ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால் புதிய வரி முறையைத் தேர்ந்தெடுக்கும் சம்பளம் பெறும் தனிநபர்கள் மற்றும் ஊதியதாரர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
உங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு உங்களுடைய வருமானம் என்ன? எந்த வரி முறை உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும்? என்பதை பற்றி சிந்தித்து முடிவெடுங்கள். இந்த சிறிய விஷயத்தின் மூலம் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சேமிக்க முடியும்.


Click it and Unblock the Notifications