தற்போது இளைஞர்கள் மத்தியில் பர்சனல் பைனான்ஸ் எனப்படும் தனிப்பட்ட நிதி சார்ந்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. ஒரு வீடு வாங்க வேண்டும் அல்லது ஒரு வாகனம் வாங்க வேண்டும் என்றால் அதனை நமது பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு திட்டமிட்டு தான் வாங்க வேண்டும் என்பதை பலரும் உணர்ந்து இருக்கிறார்கள்.
அந்த வகையில் முதன் முதலில் கார் வாங்கும் போது அதன் பட்ஜெட்டை நாம் எவ்வாறு தீர்மானிக்க வேண்டும் என்பது குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

புகழ்பெற்ற நிதி திட்டமிடல் ஆலோசகரான பட்டாபிராமன் அண்மையில் பாட்காஸ்ட் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார் . அப்போது நாம் வாங்கக்கூடிய முதல் காரின் பட்ஜெட் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்த விளக்கத்தை அவர் வழங்கியுள்ளார்.
இதன்படி நீங்கள் உங்களுடைய காரை முழுமையாக பணத்தை செலுத்தி விட்டு வாங்கினாலும் சரி இஎம்ஐ மூலம் வாங்கினாலும் சரி அந்த காரின் விலை உங்களின் மொத்த ஆண்டு வருமானத்தை தாண்டி இருக்கக் கூடாது என கூறுகிறார்.
அத்தியாவசிய தேவைக்காக கார் வாங்குபவர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தும் என பட்டாபிராமன் தெரிவித்துள்ளார் . சிலருக்கு தங்களுடைய கனவு கார் என ஒன்று இருக்கும். அப்படி கனவு காரை வாங்கும் போது பட்ஜெட்டை பார்க்க மாட்டார்கள், எனவே ஒரு நல்ல கார் வாங்க வேண்டும் என்னுடைய தேவைக்காக வாங்குகிறேன் எனும் போது இந்த விதிமுறையை பயன்படுத்தலாம் என்கிறார்.
உதாரணமாக மாதந்தோறும் 1 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கக்கூடிய ஒரு நபர் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை வாங்க வேண்டும் என எண்ணுகிறார் என்றால் நிச்சயமாக அவர் லோனில் தான் கார் வாங்க முடியும்.
அவர் 9% வட்டியுடன் வாகன கடன் பெறுகிறார், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதனை செலுத்த வேண்டும் என வைத்துக் கொண்டால், அவருடைய மாதாந்திர சம்பளத்தில் 25 சதவீத தொகை இஎம்ஐ-க்காகவே சென்றுவிடும்.
கார் வாங்குவது என்றால் காருக்கான விலையை தாண்டி அதனை பராமரிக்கும் செலவு, இன்சூரன்ஸ் செலவு, பாதுகாப்பு உபகரணங்கள் செலவு என பல விஷயங்கள் இருக்கின்றன. 12 லட்சம் ரூபாய் கார் என்றால் அதில் இருந்து கூடுதலான தொகை இதற்கெல்லாம் செலவாகும்.
எனவே கார் வாங்க வேண்டாம் என கூறவில்லை, நீங்கள் வாங்கக்கூடிய காரின் விலை உங்களுடைய ஆண்டு வருமானத்தை விட குறைவாக இருக்க வேண்டும் அல்லது அந்த அளவுக்கு வருமானம் ஈட்டும் வரை நீங்கள் கார் வாங்க வேண்டாம் என்பதே என்னுடைய அறிவுரை என தெரிவித்துள்ளார்.
Story Written By: Devika


Click it and Unblock the Notifications