சென்னை: முதலீடுகள் என்பது ஒருவரது வருமானம், செலவினம் தற்போது அவருக்கு இருக்கக்கூடிய கடன்கள் உள்ளிட்டவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு மட்டும்தான் முடிவெடுக்க வேண்டிய விஷயம். இருந்தாலும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் இந்தியாவில் பிரபலமாக இருக்கக்கூடிய ஒரு முதலீட்டு வகையாகும். இது கௌரவம் சார்ந்த விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.
ஆனால் கௌரவத்திற்காக பெரும் கடன் வலையில் நாம் சிக்கிக் கொள்ள கூடாது. ரியல் எஸ்டேட் முதலீடுகளை செய்வதற்கு முன்பு பல்வேறு விஷயங்களை கவனத்தில் வைத்து கொள்ள வேண்டியது அவசியம்.

குறிப்பாக நீங்கள் ஒரு வீடு வாங்குகிறீர்கள் என வைக்கும்போது அந்த வீட்டிற்கு என்ன ஒரு குறிப்பிட்ட தொகை டவுன் பேமெண்டாக உங்களிடம் இருக்க வேண்டும், கூடுதலாக வீட்டு பராமரிப்பு செலவு , புனரமைப்பு செலவு என பல்வேறு செலவுகள் இவற்றுடன் ஏற்படும்.
இதற்கு பட்ஜெட் போடுவது சிறந்த தீர்வாக அமைகிறது. பொதுவாகவே பட்ஜெட் என வரும்போது சர்வதேச அளவில் சொல்லப்படக்கூடிய ஒரு விதிமுறை 50 - 30- 20.
அதாவது நமது வருமானத்தின் 50 சதவீதத்தை அத்தியாவசிய செலவுகளுக்கும் 30 சதவீதத்தை பொழுதுபோக்கு உள்ளிட்ட செலவுகளுக்கும், 20 சதவீதத்தை சேமிப்பு, முதலீடு உள்ளிட்டவற்றுக்கும் ஒதுக்க வேண்டும். ஆனால் மேலே கூறியது போல ஒருவருக்கொருவர் இது மாறுபடலாம்.
இந்த விதிப்படி 20% முதலீடு என்றால் ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாய் ஊதியம் வாங்கும் ஒருவர், அதில் 3 லட்சத்தை அத்தியாவசிய தேவைகள், 1.80 லட்சத்தை பொழுதுபோக்கு தேவைகள், 1.20 லட்சத்தை முதலீடு என பிரிக்கலாம். எனவே இதன் அடிப்படையில் உங்களது ஊதியத்தை பிரித்து பாருங்கள்.
ஒருவேளை நீங்கள் ஈஎம்ஐ-க்கு வீடு வாங்கி வாடகை வீட்டை விடுத்து சொந்த வீட்டுக்கு குடியேறுகிறீர்கள் எனில், அத்தியாவசிய தொகையில் வீட்டு வாடகை இருக்காது, ஆனால் ஈஎம்ஐ, வீட்டு பராமரிப்பு செலவு ஆகியவை இடம்பெறும். அதற்கு ஏற்ப முதலீட்டை சற்றே குறைக்கலாம்.
இல்லையெனில் வீட்டை வாங்காமல் வாடகை வீட்டிலேயே இருந்து கொண்டு 20% முதலீடு என்பதை சற்றே அதிகரித்து தொடர்ச்சியாக முதலீடு செய்து ஒரு குறிப்பிட்ட தொகையை சேர்த்து சில காலம் கழித்து வீடு வாங்கலாம். பொதுவாக நாம் முதலீடு செய்யும் போது அது பலவகைப்பட்ட முதலீடாக இருக்க வேண்டும். ரியல் எஸ்டேட் என அதில் மட்டுமே பணத்தை தேக்கிவிட கூடாது.
ரியல் எஸ்டேட் மட்டுமில்லாமல் தங்கம், பங்கு, மியூச்சுவல் ஃபண்ட் என பரவலான முதலீடு வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டால் ஒரு முதலீடு இறங்கும்போது மற்றொன்று ஏறி இருக்கும் . இது தான் பரவலாக நிபுணர்கள் பரிந்துரைக்கும் முறை. எனவே இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தான் ரியல் எஸ்டேட் முதலீடு என்ற முடிவினை எடுக்க வேண்டும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications