ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சேவைகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் EPF இணையதளத்தில் உள்நுழையாமலேயே பிஎஃப் பேலன்ஸ் பார்ப்பது, கடைசி ஐந்து பரிவர்த்தனைகளை தெரிந்து கொள்வது, பிஎஃப் பாஸ்புக் டவுன்லோட் செய்வது என முக்கியமான சேவைகளை வாட்ஸ் அப் மூலம் வழங்கி வருகிறது. இதனால் உறுப்பினர்கள் எளிதில் தங்களுடைய பிஎஃப் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
EPF உறுப்பினர்கள் வாட்ஸ்அப் சேவையைப் பயன்படுத்தி சாட்பாட் மூலம் பிஎஃப் பாலன்ஸ் தொகையை சரிபார்க்கலாம். சமீபத்தில் நடந்த 5 பரிவர்த்தனைகளை பார்க்கலாம், பிஎஃப் பாஸ் புக்கை டவுன்லோட் செய்யலாம். இந்தச் சேவையைப் பயன்படுத்த EPFO இணையதளத்தில் உறுப்பினர்கள் பதிவு செய்த நம்பரை மட்டுமே பயன்படுத்த முடியும்.

அதேபோல உறுப்பினரின் மொபைல் நம்பர் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். வாட்ஸ்அப் சேவையை 2026-ஆம் ஆண்டின் நவம்பர் 1-ஆம் தேதி அன்று EPFO அமைப்பின் 74-வது பவுண்டேஷன் டே அன்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சரான மன்சுக் மாண்டவியா அறிமுகம் செய்து வைத்தார்.
வாட்ஸ்அப் மூலம் EPF பேலன்ஸை சரி பார்ப்பது எப்படி?: முதலில் ஈபிஎப்ஓ அமைப்பின் பிரத்தியேக வாட்ஸப் நம்பரான 87964 41800 என்ற நம்பரை மொபைலில் சேவ் செய்ய வேண்டும். பின்னர் அந்த நம்பரை வாட்ஸ்அப்பில் திறந்து "Hi" என்று மெசேஜ் அனுப்ப வேண்டும்.
நீங்கள் Hi என்று மெசேஜ் அனுப்பியவுடன் சாட்பாட் ஒரு வெல்கம் மெசேஜை உங்களுக்கு அனுப்பும். அதில் உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்ந்தெடுக்கக் கேட்கும்.
பின்னர் சாட்டில் காண்பிக்கப்படும் மெனுவிலிருந்து "PF balance" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது உங்களுடைய நம்பருக்கு ஒரு ஓடிபி அனுப்பப்படும். அந்த ஓடிபி-ஐ வழங்கி ஓடிபி சரிபார்ப்பு செயல்முறையை முடிக்கவும்.
ஓடிபி சரிபார்ப்பு முடிந்ததும் PF அக்கவுண்ட்டைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுத்த அக்கவுண்டில் எவ்வளவு PF பாலன்ஸ் இருக்கிறது என்பதை சாட்பாட் காண்பிக்கும்.
வாட்ஸ்அப் மூலம் உங்கள் EPF பாஸ்புக்கை டவுன்லோட் செய்வது எப்படி?: வாட்ஸ்அப் மூலம் EPF பாஸ்புக்கை டவுன்லோட் செய்ய, உறுப்பினர்கள் EPFO-வின் வாட்ஸ்அப் நம்பருக்கு "Hi" என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். மெனுவிலிருந்து "பாஸ்புக் டவுன்லோட்" என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஓடிபி சரிபார்ப்பு செயல்முறையை முடித்தவுடன், PF அக்கவுண்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு, சாட்பாட் பாஸ்புக்கை டவுன்லோட் செய்ய காண்பிக்கும்.
கடைசி 5 EPF பரிவர்த்தனைகளை பார்ப்பது எப்படி?: மேலே கூறப்பட்டுள்ள ஒரே செயல்முறையை தான் மீண்டும் செய்ய வேண்டும். உறுப்பினர்கள் OTP சரிபார்ப்பு செயல்முறையை முடித்த பிறகு PF அக்கவுண்ட்டைத் தேர்ந்தெடுத்து "Last 5 Transactions" என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது டிஸ்பிளேவில் கடைசி 5 EPF பரிவர்த்தனைகள் காண்பிக்கப்படும்.
இது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சேவை. எனவே உறுப்பினர்களுக்கு எப்போதாவது தொழிலுட்பக் கோளாறு ஏற்படும் வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில் சிறிது நேரம் காத்திருந்து மீண்டும் முயற்சிக்கலாம் அல்லது உமாங் ஆப் மூலம் முயற்சிக்கலாம்.


Click it and Unblock the Notifications
