சென்னை: தற்போது கிரெடிட் கார்டு பயன்படுத்துவது என்பது சாதாரணமாகிவிட்டது. இப்படி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு பெரிய பிரச்சினையாக இருப்பது அந்த கட்டணங்களை உரிய நேரத்தில் செலுத்தாமல் இருப்பது தான்.
நமது அக்கவுண்டில் பணம் இல்லை என்றால் கூட கிரெடிட் கார்டில் நமக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தொகையை பயன்படுத்தி நாம் நமக்கு தேவையான பொருட்களை வாங்க முடியும் அல்லது சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் .உரிய நேரத்தில் அந்த தொகையை திரும்ப செலுத்துவது தான் சாமர்த்தியம்.

ஆனால் பலரும் இதனை தவறவிட்டு கூடுதல் வட்டி மற்றும் அபராத தொகையோடு கிரெடிட் கார்டு பில்களை கட்டி வருவதை நாம் காண முடிகிறது. நிதி ஆலோசகர்கள் கிரெடிட் கார்டு பில்களை உரிய நேரத்தில் செலுத்துவதற்கு ஐந்து முக்கிய யோசனைகளை வழங்குகின்றனர்.
1.குறைந்த நிலுவை தொகை செலுத்துதல்: கிரெடிட் கார்டு பில் ஸ்டேட்மெண்ட்டை பெறும்போது அதில் இரண்டு ஆப்ஷன்கள் காண்பிக்கும். பில் தொகையை முழுவதுமாக செலுத்தி விடுவது அல்லது ஒரு குறைந்தபட்ச தொகையை செலுத்துவது. இவ்வாறு குறைந்தபட்ச தொகையை செலுத்தும் வாய்ப்பை தேர்வு செய்பவர்கள் மீதமுள்ள தொகைக்கு கூடுதலாக வட்டியை செலுத்த வேண்டியதிருக்கும். ஆனால் பலரும் இது தெரியாமல் குறைந்த தொகையை செலுத்திவிட்டு அதிக வட்டி வலையில் சிக்குகின்றனர். ஏனெனில் சில சமயங்களில் கிரெடிட் கார்டு கட்டணங்களின் மீது விதிக்கப்படும் வட்டி மூன்று முதல் நான்கு சதவீதம் வரை இருக்குமாம்.
2.அதிகமாக பயன்படுத்துவது: கிரெடிட் கார்டுகளில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட லிமிட் வழங்கப்படுகிறது. ஆனால் ஸ்வைப் செய்து அதன் மூலம் பொருட்களை வாங்குவது மிக எளிதாகி விட்டதால் பெரும்பாலானவர்கள் தங்களுக்கான லிமிட்டையும் தாண்டி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். இவர்கள் தான் பெரும்பாலும் இந்த கிரெடிட் கார்டு கடன் வலையில் சிக்கிக் கொள்கிறார்கள். எனவே ஒரு மாதத்திற்கு இவ்வளவு தொகை தான் கிரெடிட் கார்டில் பயன்படுத்த வேண்டும் என்பதை தீர்மானம் செய்து அதனை உறுதியாக பின் தொடர வேண்டும்.
3. பல கிரெடிட் கார்டுகள்: ஒரு கிரெடிட் கார்டு கடனை திரும்ப செலுத்த மற்றொரு கிரெடிட் கார்டு வாங்குவது. அதை செலுத்த மற்றொன்று வாங்குவது என ரொட்டேஷனிலேயே பயன்படுத்துவார்கள். இதுவும் ஒரு தவறான செயல்முறை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பார்த்தால் உங்களிடம் கிரெடிட் கார்டு கடன்கள் ஒரு மலை போல உயர்ந்து நிற்கும் என எச்சரிக்கின்றனர்.
4. ஈஎம்ஐ : ஒருவேளை உங்களால் உங்களுடைய கிரெடிட் கார்டு கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்த முடியவில்லை என்றால் அந்த பில் தொகையை ஈஎம்ஐஆக மாற்றி மாதாந்திர அடிப்படையில் செலுத்திவிட முடியுமா என உங்கள் வங்கியிடம் கேட்டு அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
5. கிரெடிட் ஃப்ரீ காலம்: ஒவ்வொரு கிரெடிட் கார்டு நிறுவனமும் கிரெடிட் ஃப்ரீ பீரியட் என 40 முதல் 45 நாட்களை வழங்குகின்றன. இந்த கிரெடிட் பீரியடை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதே போல உரிய தேதியில் கிரெடிட் கார்டு கட்டணத்தை செலுத்துவதை ஒழுக்கமாக பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்குகின்றனர்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications