நம்ம ஊர் வழக்கத்தில் பெண்கள் திருமணமாகி போகும்போது அவர்களுக்கு சீதனம் வழங்குவார்கள். தங்க நகைகள், வெள்ளி பாத்திரங்கள், ரொக்கப்பணம், வங்கிகளில் பிக்சட் டெபாசிட், நிலம், வீடு, வீட்டு உபயோகப் பொருட்கள் என அசையும் மற்றும் அசையா சொத்துக்களை சீதனம் என்ற பெயரில் கொடுப்பது வழக்கம். இப்படி வழங்கப்படும் பொருட்கள் உண்மையில் அந்தப் பெண்ணுக்கு சொந்தமானதா? அல்லது அவருடைய கணவரின் குடும்பத்தினருக்கும் சொந்தமானதா? என்பதைத் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
நம் நாட்டில் நடக்கும் அனைத்திற்கும் சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அப்படித்தான் பெண்கள் கொண்டுவரும் சீதனம் யாருக்கு சொந்தம் என்பதற்கு இந்தியாவில் சட்டம் இருக்கிறது.
சீதனம் என்றால் என்ன?: ஒரு பெண் திருமணமாகி மற்றொரு வீட்டிற்கு செல்லும் போது அவருடைய குடும்பத்தினர் திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணத்தின் போதோ கொடுக்கும் சொத்துக்களை தான் சீதனம் என்கிறோம். பெற்றோர், உடன் பிறந்தவர்கள், பெண்ணின் தாய் மாமன் மற்றும் மாமிகள் இணைந்து பாசத்தோடு கொடுக்கும் சீர்வரிசைகளுக்கு அவருடைய கணவரே உரிமை கொண்டாட முடியாது.

சீதனம் யாருக்குச் சொந்தம்?: ஒரு பெண் கொண்டு வரும் நகை அல்லது பிற சொத்துக்கள் அனைத்தும் அந்தப் பெண்ணின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். இதற்கு முன்னர் நடந்த குடும்பத்த தகராறு வழக்குகளில் பலமுறை உச்சநீதிமன்றம் இதே தீர்ப்பை தான் வழங்கியுள்ளது.
மனைவியின் நகைக்கு மாமியார் சொந்தம் கொண்டாடலாமா?: கண்டிப்பாக முடியாது. ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அவளுடைய கணவரோ அல்லது கணவர் வீட்டு உறவினர்களோ பெண்ணின் சீதனத்தை எடுத்துக் கொள்ள முடியாது. ஒருவேளை அந்தப் பெண்ணின் விருப்பத்தின் பேரில் வழங்கப்பட்டால் அதை தாராளமாக அவர்கள் பயன்படுத்தலாம். அப்படி இல்லாத பட்சத்தில் பெண்ணின் நகைகள் கணவர் வீட்டின் பீரோ அல்லது லாக்கரில் இருந்தாலும், அவற்றின் உரிமை என்னவோ அந்த பெண்ணுக்கு மட்டும் தான். எனவே சீதனத்தை வைத்துக்கொண்டு கணவரோ அல்லது மாமியார், மாமனாரோ தர மறுத்தால் அந்த பெண் வழக்கு தொடரலாம்.
சட்டம் என்ன சொல்கிறது?: பாரதிய நியாய சன்ஹிதா (BNS) 2023, செக்சன் 316-இன் கீழ் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்ட சொத்தை முறையற்ற வகையில் வைத்துக் கொள்வது அல்லது கையாடல் செய்வது, நம்பிக்கை மோசடி செய்வது சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்கு மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
டொமஸ்டிக் வயலன்ஸ் ஆக்ட் என்ன சொல்கிறது?: குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும்.. 2005-ஆம் ஆண்டின் டொமஸ்டிக் வயலன்ஸ் ஆக்டின் கீழ் ஒரு பெண் தன்னுடைய சீதனம், மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் பிற உடமைகளை திருப்பித் தருமாறு கணவர், மாமியார் மற்றும் மாமனாருக்கு எதிராக வழக்கு தொடுக்கலாம். இதுபோன்ற சூழலில் நீதிபதி சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அல்லது முடக்க உத்தரவிடலாம்.
ஒரு பெண் தன்னுடைய சீதனத்தை அவருடைய கணவர் வீட்டார் வைத்திருக்கும் பட்சத்தில் செய்ய வேண்டிய விஷயங்கள்:
சட்டபூர்வ அறிவிப்பை அனுப்புதல்: முதலில் தனது சீதனத்தை கேட்டு சட்டப்பூர்வ அறிவிப்பை அனுப்ப வேண்டும். அதன் பிறகு நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். நீங்கள் எந்தெந்த சீதனத்தை கொண்டு சென்றீர்கள் என்ற விவரங்கள், திருமண புகைப்படங்கள் மற்றும் பரிசாக அளிக்கப்பட்ட பொருட்களின் எழுத்துப்பூர்வமான பட்டியல் தேவைப்படும்.
காவல் நிலையத்தில் புகார் அளித்தல்: கணவரின் குடும்பத்தினர் பொருட்களை திரும்ப தர மறுத்தால் பிஎன்எஸ் பிரிவு 316-இன் கீழ் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டின் பெயரில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.
நீதிமன்றத்தை அணுகுதல்: அதன் பிறகு டொமஸ்டிக் வயலன்ஸ் ஆக்டின் கீழ் ஒரு பெண் தனது சீதனத்தை திரும்ப தர கோரி நீதிமன்றத்தை அணுகலாம்.
சீதனமும் வரதட்சணையும் ஒன்றா: கண்டிப்பாக இல்லை. வரதட்சணை என்பது திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண் வீட்டாரிடம் கேட்கும் சொத்து. 1961-ஆம் ஆண்டின் வரதட்சணைத் தடைச் சட்டத்தின் கீழ் வரதட்சனை கேட்பது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. மறுபுறம் சீதனம் என்பது ஒரு பெண்ணின் சொந்த பயன்பாட்டிற்காக அவருடைய குடும்பத்தினர் தானாக முன்வந்து வழங்கும் பரிசு. இந்த இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது.
பெண்களைப் போலவே ஆண்களுக்கும் தனி சட்டங்கள் இருக்கிறது. ஒரு திருமணமான பெண் பிரச்சனைகளை சந்திக்கும் பட்சத்தில் அவர் மேலே கூறப்பட்டுள்ள விஷயங்களை செய்வதன் மூலம் தங்கள் சீதனத்தை திரும்ப பெறலாம்.


Click it and Unblock the Notifications