பலருக்கும் தங்களுக்கு வருகின்ற வருமானத்தை வைத்து மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து விட வேண்டும் என்ற இலக்கு இருக்கும். சரியான முதலீடு மற்றும் சிறந்த திட்டமிடல் இருந்தாலே போதும் உங்களுடைய நிதி இலக்குகளை நீங்கள் எளிதில் அடையலாம். எனவே ரூ. 50,000 மாத சம்பளத்தில், ரூ. 1 கோடி சேமிக்க முடியுமா? என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். இது நிச்சயமாக சாத்தியமே. அதற்கு எங்கு முதலீடு செய்வது? எப்படி முதலீடு செய்வது? என்பதை முன்கூட்டியே நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். அடுத்ததாக உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். அதாவது உங்கள் சம்பளத்தில் ரூ. 1 கோடி சேமிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்று. நீங்கள் எவ்வளவு முதலீடு செய்ய இருக்கிறீர்கள் என்பதை பொறுத்தே எவ்வளவு நேரத்தில் ரூ. 1 கோடி இலக்கை அடைய முடியும் என்பது இருக்கும். அதாவது நீங்கள் அதிக அளவு முதலீடு செய்தால், உங்கள் இலக்கை அடைய குறைவான நேரமே ஆகும்.
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் நீண்ட கால சேமிப்பு என்று வரும்போது சிறந்தத் தேர்வாக இருக்கும். நீங்கள் அவ்வப்போது சிறிய தொகையை முதலீடு செய்தாலும், கூட்டு வட்டி காரணமாக நீண்ட காலத்தில் பெரிய தொகையை சேமிக்க முடியும். சந்தையில் பல மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் உள்ளன. ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் கிடைக்கும் வருமானம் பொதுவாக ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகளை விட அதிகமாக இருக்கும். மற்ற வகைகளை விட ஈக்விட்டி முதலீடுகள் பெரும்பாலும் அபாயகரமானவை என்று கூறப்பட்டாலும், நீண்ட காலத்திற்கு பணவீக்கத்தை எதிர்கொள்ளும் வருமானத்தை வழங்கும் ஒரே கருவி இதுவாகும்.

மொத்தமாக ரூ.1 கோடியை சேமிக்க, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் SIP முதலீட்டைத் தொடங்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் SIP எப்படி வேலை செய்கிறது? நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் SIP-இல் ஒரு தொகையை தவறாமல் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இதனை நீங்கள் மாத மாதம் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை என எப்படி வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். மியூச்சுவல் ஃபண்டிலிருந்து ரூ.1 கோடியைப் பெற எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
1 கோடியை சேமிக்க எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?: ரூ. 1 கோடி நிதி இலக்கை அடைய, ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளத்தில் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை முதலீடு செய்ய முடிந்தால், உங்கள் கனவு இலக்கான ரூ.1 கோடியை குறுகிய காலத்திற்குள் அடையலாம். நீங்கள் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்தால், உங்கள் இலக்கை அடைய அதிக நேரம் எடுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் ரூ. 50,000 மாத சம்பளத்தில் 15 சதவீதத்தை முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதாவது ரூ. 7,500 ரூபாய் ஒவ்வொரு மாதமும், 12 சதவீத வருடாந்திர வருமானத்தை வழங்கும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் 20 ஆண்டுகளுக்கு நிலையான வருமானத்தைப் பெற்றால், 276 மாதங்கள் அல்லது 23 ஆண்டுகளில் ரூ.1 கோடியைச் சேமிக்க முடியும்.
அதுவே, உங்கள் ரூ. 50,000 மாத சம்பளத்தில் 20 சதவீதத்தை முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதாவது ரூ. 10,000 ரூபாய் ஒவ்வொரு மாதமும், 12 சதவீத வருடாந்திர வருமானத்தை வழங்கும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் 20 ஆண்டுகளுக்கு நிலையான வருமானத்தைப் பெற்றால், 249 மாதங்கள் அல்லது 20.75 ஆண்டுகளில் ரூ.1.01 கோடியைச் சேமிக்க முடியும்.
மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால், 12% வட்டி விகிதத்தில் ரூ.1 கோடியை சேமிக்க 317 மாதங்கள் அல்லது 26.4 ஆண்டுகள் ஆகும்.


Click it and Unblock the Notifications