ஒருவரின் இழப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஒரு குடும்பத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் அந்த துயரத்தில் இருந்து இறந்தவரின் குடும்பத்தினர் மீண்டு வருவதற்கு முன்பே பிரச்சினைகள் ஆரம்பித்துவிடும். அதில் முக்கியமானது சொத்து பிரச்சனை. அதிலும் ஒரு சிலர் அப்பா பெயரில் இருக்கும் சொத்தை அவர் காலமான பிறகும் அவர் பெயரிலேயே வைத்திருப்பார்கள். அப்பா பெயரில் தானே இருக்கிறது கட்டாயம் அது அவருடைய பிள்ளைகளை வந்து சேரும் என்று எண்ணிக் கொண்டு தலைமுறை தலைமுறையாக பெயர் மாற்றம் செய்யாமலேயே விட்டுவிடுவார்கள்.
இதுதான் அண்ணன், தம்பி பிரச்சனைக்கும், பங்காளி சண்டைக்கும் பெரிய காரணமாய் அமைகிறது. ஒருவரின் இறப்புக்குப் பிறகு அவருடைய சொத்தை பிறர் பெயரில் மாற்றுவது முக்கியம். இதைச் செய்வதில் உள்ள சட்ட விதிகள் மற்றும் விதிமுறைகள் என்ன? என்பதைத் தெரிந்து கொண்டால் எந்தப் பிரச்சினையும் இன்றி இறந்தவரின் பெயரில் இருக்கும் சொத்தை மற்றொருவர் பெயருக்கு மாற்றலாம்.
உயில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?: இறந்த நபர் உயில் எழுதிவிட்டு இறந்தால் சொத்து விவகாரத்தில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. உயில் என்பது இறப்பவர் தன் வாழ்நாளிலேயே யாருக்கு எவ்வளவு சொத்து சேர வேண்டும் என்பதைச் சட்டப்பூர்வமாக எழுதி வைக்கும் ஆவணம். எனவே இறப்பதற்கு முன்பு ஒரு செல்லுபடியாகும் உயிலை எழுதி பதிவு செய்து விட்டால் அவர் கூறியிருக்கும் விவரங்களின் அடிப்படையில் தான் சொத்து பிரிக்கப்படும்.
எனவே ஒருவர் இறந்த பிறகு உயில் கிடைத்தால் முதல் வேலையாக நீதிமன்றத்தில் புரோபேட் பெற வேண்டும். புரோபேட் என்பது ஒன்றுமில்லை நீதிமன்றத்தின் மூலம் வழங்கப்படும் சர்டிபிகேட் அவ்வளவுதான். நீங்கள் வைத்திருக்கும் உயில் உண்மையானது தானா? அல்லது போலியாக யாரேனும் தயார் செய்திருக்கின்றனரா? என்பதை உறுதிப்படுத்துவதற்காக தான் இந்த ப்ரோபேட் வழங்கப்படுகிறது.

உயில் இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?: சொத்து வைத்திருக்கும் நபர் உயில் எழுதாமல் இறந்து விட்டால் ஒரு சில விதிகளின் அடிப்படையில் சொத்து பிரித்து வழங்கப்படும். இந்து, சீக்கியர்கள், புத்தர்கள், ஜெயினர்கள் போன்றோர் இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956-இன் கீழ் சொத்துக்களை பிரித்துக் கொள்ள வேண்டும். அதாவது இறந்தவருடைய மனைவி குழந்தைகள் மற்றும் அம்மாவுக்கு தான் சொத்தில் உரிமை உண்டு. எனவே இந்த மூவருக்கும் சொத்தை சமமாக பிரித்து வழங்க வேண்டும். அதுவே முஸ்லிம்களாக இருந்தால் ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் சொத்து பிரித்து வழங்கப்படும்.
கிறிஸ்தவர்களாக இருந்தால் இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925-இன் கீழ் இவர்களுக்கென தனி சொத்து பிரிப்பு முறைகள் உள்ளன. அதன்படி சொத்து பிரிக்கப்படும். இதற்கு கூடுதலாக மதம் எதுவாக இருந்தாலும் உயில் இல்லாமல் இருந்தால் முதலில் இறந்தவருடைய வாரிசுகள் "வாரிசு சான்றிதழை" பெற வேண்டும். இதை நீங்கள் தாசில்தார் அலுவலகங்களில் பெறலாம்.
வாரிசுகள் அனைவருக்கும் சொத்தில் சம பங்கு இருப்பதால் ஒரு சொத்தை இறந்தவரின் வாரிசுகள் பெயர் மாற்றம் செய்யும்போது அனைத்து வாரிசுகளும் சேர்ந்து தான் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். இறந்தவருடைய வாரிசுகளில் யாரேனும் ஒருவர் தங்களுக்கு சொத்து வேண்டாம் என்று நினைத்தால் அவருடைய அண்ணனுக்கும் அல்லது தம்பி, தங்கைக்கோ சொத்தை பிரித்து வழங்கலாம். அதற்கு நீங்கள் தனி பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டும்.
சரி சொத்து மாறிவிட்டால் என்ன செய்ய வேண்டும்?: உங்களுடைய பங்கு உங்கள் கைக்கு வந்துவிட்டால் அதன் பிறகு நீங்கள் முக்கியமாக செய்ய வேண்டியது இதுதான். அரசாங்க பதிவேடுகளில் சொத்தின் உரிமையாளர் பெயரை கண்டிப்பாக மாற்ற வேண்டும். இதைத்தான் பட்டா மாற்றுதல் என கூறுகிறோம். இன்றெல்லாம் பட்டா விண்ணப்பிப்பது ஆன்லைனிலேயே வந்துவிட்டது. எனவே தேவைப்படும் ஆவணங்களை எல்லாம் வைத்துக் கொண்டு நீங்கள் ஆன்லைனில் பட்டா பெறலாம். இறந்தவருடைய சொத்தை பிரிப்பதில் ஒரு சில சிக்கல்களும் இருப்பதால் காலம் தாழ்த்தாமல் உடனே ஆவணப் பணிகளைத் தொடங்கினால் பின்னாலில் எந்த சிக்கலும் வராமல் தடுக்கலாம்.


Click it and Unblock the Notifications