கடன் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்! RBI-யின் அதிரடி உத்தரவு - இனி வசூல் ஏஜெண்டுகள் அராஜகம் செல்லாது!

கடன் கொடுத்தவன் காலையிலும், எடுத்தவன் மாலையிலும் கவலைப்படுவான் என்பது பழமொழி. ஆனால் இன்று நிலைமையே வேறு. வாங்கிய கடனை திருப்பி செலுத்த சிறு தாமதம் ஏற்பட்டால் போதும், முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் மிரட்டல் அழைப்புகள், அநாகரீகமான வசூல் முறைகள் என ஒரு சராசரி மனிதனின் நிம்மதியே கேள்விக்குறியாகி வருகிறது.

இனி அந்த அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ரிசர்வ் வங்கி (RBI) அதிரடியாக களம் இறங்கியுள்ளது. சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு, லட்சக்கணக்கான கடன்தாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்றே சொல்லலாம். இனி வசூல் ஏஜெண்டுகள் உங்கள் அலுவலகத்திற்கோ, வீட்டிற்கோ உங்கள் அனுமதியின்றி வர முடியாது. குறிப்பிட்ட நேரத்தை தாண்டி உங்களை அழைக்கவும் முடியாது. இது ஒருபுறம் இருக்க, ஆன்லைன் மோசடிகளில் பணத்தை இழந்தால் இழப்பீடு வழங்கும் பாதுகாப்பு கவசத்தையும் ஆர்பிஐ அறிமுகம் செய்துள்ளது.
ஏஜெண்டுகளின் டார்ச்சருக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி? உங்கள் பணத்தை பாதுகாப்பது எப்படி? ஆர்பிஐ-யின் இந்த புதிய விதிகள் உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றப்போகிறது? விரிவாகப் பார்க்கலாம்.

கடன் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்! RBI-யின் அதிரடி உத்தரவு - இனி வசூல் ஏஜெண்டுகள் அராஜகம் செல்லாது!

ஆர்பிஐ-ன் புதிய அறிவிப்பு?

வசூல் ஏஜெண்டுகளால் துன்புறுத்தல்களை சந்திக்கும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி மேலும் கடுமையாக்க உள்ளது. நாடு முழுவதும் அச்சுறுத்தல், மிரட்டல் மற்றும் கட்டாயப்படுத்தி கடன் வசூலிக்கும் புகார்கள் அதிகரித்து வருவதால், நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய வங்கியானது இந்த முடிவை எடுத்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகையில், கடன் வசூல் முகவர்களின் முறையற்ற செயல்பாடுகளை தடுக்கவும், வாடிக்கையாளர்களை கண்ணியமாக நடத்துவதை உறுதி செய்யவும், விரைவில் புதிய வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மூன்று முக்கியத் திட்டங்கள்?

1. தவறான விற்பனை (Mis-selling): கிரெடிட் கார்டு கடன், முதலீடு, இன்சூரன்ஸ் என பல வகையான நிதி தயாரிப்புகள் குறித்து, தவறான தகவல்கள் கொடுத்து விற்பனை செய்வதை தடுக்கும் திட்டம்.
2. கடன் வசூல் நடைமுறைகள்: கடன் வசூல் செய்யும் முறைகள் மற்றும் வசூல் ஏஜெண்டுகளை நியமிப்பது குறித்த புதிய விதிகள்.

3. மின்னணு பணப்பரிமாற்றம் பாதுகாப்பு: அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் பணப்பரிமாற்றங்களில் வாடிக்கையாளர்களின் பொறுப்பை குறைத்தல் (Liability Limiting).

ரிசர்வ் வங்கி இப்போது தலையிடக் காரணம் என்ன?

கடந்த சில மாதங்களாக, வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களால் (NBFCs) நியமிக்கப்படும் ஏஜெண்டுகள், வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக அழைப்புகளை மேற்கொள்வது, மிரட்டுவது மற்றும் பொதுவெளியில் அவமானப்படுத்துவது போன்ற புகார்கள் அதிகரித்துள்ளன. இது தற்போதுள்ள விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை அல்லது அமல்படுத்தப்படவில்லை என்ற கவலையை அதிகரித்துள்ளன. இந்த சூழலில் தான் புதிய விதிகள் மூலம் இந்த இடைவெளியை நிரப்பவும், வசூல் முகவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் அந்தந்த வங்கிகளே நேரடியாக பொறுப்பேற்கவும் வழிவகை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வரைவு வழிகாட்டுதல்?

கடன் வசூல் ஏஜெண்டுகள் குறித்த விதிகளை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்த ரிசர்வ் வங்கி (RBI) மேலும் இரண்டு முக்கியமான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட உள்ளது.

1. தவறான விற்பனையை தடுத்தல்

பல நேரங்களில் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படாத அல்லது அவர்களுக்கு பொருத்தமில்லாத கடன் திட்டங்கள், காப்பீடுகள் மற்றும் முதலீட்டு திட்டங்கள் வற்புறுத்தி விற்கப்படுவதாக புகார்கள் எழுகின்றன. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்களின் லாபத்திற்காக வாடிக்கையாளர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் தேவையற்ற தயாரிப்புகளை திணிப்பதை தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

2. அங்கீகரிக்கப்படாத மின்னணு பரிமாற்றங்களில் வாடிக்கையாளர் பொறுப்பு

டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களின் போது, வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல் நடக்கும் மோசடிகளுக்கு, யார் பொறுப்பேற்பது என்பதில் இப்போது கூடுதல் தெளிவு வரவுள்ளது.

டிஜிட்டல் மோசடிக்கு இழப்பீடு?

புதிய வரைவு அறிக்கையின் படி, சிறிய அளவிலான டிஜிட்டல் பண மோசடிகளில் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு 25,000 ரூபாய் வரை இழப்பீடு வழங்க ஒரு பொறிமுறையை அறிமுகப்படுத்த ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஆன்லைன் மோசடிகள் குறித்து அதிக விழிப்புணர்வு இல்லாத டிஜிட்டல் வங்கி பயனர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும். அதோடு மூத்த குடிமக்கள் போன்ற எளிதில் ஏமாற்ற படக்கூடிய நபர்களுக்கு, கூடுதல் அங்கீகாரம் மற்றும் தாமதமான பண வரவு போன்ற பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஒரு விவாத அறிக்கையையும் ஆர்பிஐ வெளியிட உள்ளது.

தற்போதுள்ள ரிசர்வ் வங்கி விதிகள் கூறுவது என்ன?

தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின் படி, கடன் வசூல் என்ற பெயரில் துன்புறுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. கடன் வசூலிக்க வரும் ஏஜெண்டுகளுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது.

அடையாள அட்டை: அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மட்டுமே கடன் வசூலிக்க வர வேண்டும். அவர்கள் வங்கியால் வழங்கப்பட்ட அங்கீகார கடிதம் மற்றும் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.

நேர கட்டுப்பாடு: காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளவோ அல்லது நேரில் சந்திக்க அனுமதி உண்டு.

மிரட்டல் தடை: உடல் ரீதியான வன்முறை, தரக்குறைவான வார்த்தைகள், மிரட்டல் அல்லது வற்புறுத்தல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

தனிமனித ரகசியம்: வாடிக்கையாளரின் கடன் விவரங்களை அண்டை வீட்டார், உறவினர்கள் அல்லது சமூக ஊடகங்களில் பகிரக் கூடாது.

வங்கியின் பொறுப்பு: ஏஜெண்டுகளின் எந்தவொரு தவறான நடத்தைக்கும் அந்தந்த வங்கியே பொறுப்பேற்க வேண்டும்.

இது ஏன் முக்கியமானது?

வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத சூழலில் இருப்பவர்களுக்கு ஏற்கனவே நிதி ரீதியான மன அழுத்தம் இருக்கும். இந்நிலையில், கடன் வசூல் என்பது ஒருவரின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் பாதிக்கும் வகையில் இருக்க கூடாது என்பதே ரிசர்வ் வங்கியின் நோக்கமாகவும் உள்ளது. உண்மையில் இது நல்ல விஷயம் தான்..

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+