மும்பை: பாலிவுட் பிரபலங்கள் பலரும் திரைப்படங்களில் நடிப்பது, படங்களை தயாரிப்பது ஆகியவை தாண்டி வேறு தொழில்களிலும் கால்பதித்துள்ளனர். பேஷன் பிராண்டுகள், அழகு சாதன பொருட்கள் என பல்வேறு பிரிவுகளிலும் தங்களுக்கு என ஒரு பிராண்டை உருவாக்கி விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் பிரபலங்கள் தொடங்கிய தொழில்களின் நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம்.
Storyboard 18 என்ற தளம் பாலிவுட் நட்சத்திரங்கள் திரைப்படங்களை தாண்டி என்னென்ன தொழில்களில் ஈடுபட்டுள்ளனர் அவற்றின் நிலவரம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்தி வெளியிட்டுள்ளது. இதன் படி நடப்பு ஆண்டில் பெரும்பாலான பிரபலங்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் சரிவை சந்தித்து இருப்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக தீபிகா படுகோனேவின் ஸ்கின் கேர் பிராண்டான 82 டிகிரி ஈ (82°E) நிறுவனம் 2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் சுமார் 25 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான ராங் (WROGN) நிறுவனத்தின் வருவாயும் 2024 ஆம் நிதியாண்டில் முதல் 9 மாதங்களில் தனது வருவாயில் 29 சதவீத வரை சரிவடைந்துள்ளது.
அதேபோல ஷாஹித் கபூருக்கு சொந்தமான ஸ்கல்ட் (Skult), அனுஷ்கா சர்மாவுக்கு சொந்தமான நஷ் (Nush) மற்றும் சோனம் கபூருக்கு சொந்தமான ரெஷன் (Rheson) ஆகிய நிறுவனங்களின் வருமானமும் நடப்பாண்டில் பெருமளவில் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
தொடக்கத்தில் நல்ல வருவாயை தந்த இந்த நிறுவனங்கள் தற்போது சரிவடைந்ததற்கு நம்பகத்தன்மை குறைந்ததே காரணம் என சொல்லப்படுகிறது. ஏனெனில் இந்த பிரபலங்கள் தங்கள் பெயரில் ஒரு பிராண்டை வைத்து கொண்டு மற்ற நிறுவன பிராண்டுகளின் விளம்பர தூதர்களாகவும் இருக்கின்றனர். எனவே நம்பகத்தன்மை குறைந்துவிடுகிறது என சொல்லப்படுகிறது.
ஆனால் சில நடிகர்கள் தங்கள் நிறுவனங்கள் மூலம் வெற்றி பெற்றுள்ளனர். ஆலியட் பட் உருவாக்கிய Ed-a-Mamma என்ற குழந்தைகளுக்கான பிராண்ட் நடப்பாண்டில் நான்கு மடங்கு அதிக வருமானம் தந்துள்ளது. அண்மையில் கூட ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் இந்த நிறுவனத்தை கையகப்படுத்தியது.
அதேபோல கத்ரீனா கைஃப்புக்கு சொந்தமான Kay Beauty நிறுவனம் அண்மையில் நைகா நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு புதிதாக 15 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இந்த நிறுவனம் அடுத்த ஓராண்டில் 62 சதவீத வளர்ச்சி அடையும் என சொல்லப்படுகிறது.
அடுத்ததாக ரித்திக் ரோஷனின் நிறுவனமும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. HRX என்ற இந்த நிறுவனத்தின் வருமானம் சமீபத்தில் தான் ஆயிரம் கோடி ரூபாய் என்ற மதிப்பை கடந்தது.
Written by: Devika


Click it and Unblock the Notifications