லண்டன்: இந்தியர்களும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்களும் உலகின் முன்னணி நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பை ஏற்பது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட பாம் கவுர் ஹெச்எஸ்பிசி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பு ஏற்க இருக்கிறார்.
ஹெச்எஸ்பிசி நிறுவனம் தொடங்கப்பட்ட இந்த 160 ஆண்டுகளில் முதன்முறையாக பெண் ஒருவருக்கு தலைமை நிதி அதிகாரி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் முன்னணி நிதி சேவை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது ஹெச்எஸ்பிசி.

இந்த நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியாக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட பாம் கவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் வரும் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து இந்த பொறுப்பினை வகிப்பார் என ஹெச்எஸ்பிசி தெரிவித்துள்ளது. தற்போது இடைக்கால தலைமை நிதி அதிகாரியாக இருக்கும் ஜான் பின்காமுக்கு பதிலாக பாம் கவுர் இந்த பொறுப்பினை ஏற்றுக் கொள்வார் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் லண்டனில் வசிக்கக்கூடிய பாம்கோர் கடந்த 2013 ஆம் ஆண்டில் ஹெச்எஸ்பிசி வங்கி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். பின்னர் அடுத்தடுத்து பதவி உயர்வினை பெற்ற அவர் இந்த 11 ஆண்டுகளில் ஹெச்எஸ்பிசி குழுமத்தின் சிறப்பு ரிஸ்க் அண்ட் கம்பிளைன்ட் ஆபிஸராக (Chief Risk and Compliance Officer) பதவி உயர்வு பெற்றார். இந்த நிலையில் அவருக்கு தற்போது தலைமை நிதி அதிகாரி பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
ஹெச்எஸ்பிசி நிறுவனத்தில் இருக்கும் இரண்டாவது மிக உயர்ந்த பதவி இதுவாகும். கடந்த ஜூலை மாதத்தில் தான் ஹெச்எஸ்பிசி நிறுவனம் தங்களுடைய தலைமை செயல் அதிகாரியை மாற்றியது. அந்த மாற்றம் நடந்து இரண்டு மாதங்களிலேயே தலைமை நிதி அதிகாரியும் தற்போது மாற்றப்பட்டுள்ளார்.
இந்தியாவின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் நிதி துறையில் எம்பிஏ படித்தவர் பாம் கவுர், கிட்டத்தட்ட 40 ஆண்டு காலம் வங்கி துறையில் பணி அனுபவம் கொண்டவராக அவர் இருக்கிறார் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக நிதி சேவைகளில் பெரிய அளவிலான மாற்றங்கள் வந்திருக்கும் சூழலில் பாம் கவுர் இந்த பொறுப்பினை ஏற்கிறார்.
தற்போது அவருக்கு 60 வயது ஆகிறது. பொதுவாக 60 வயதில் இருப்பவர்கள் பணி ஓய்வு பெற வேண்டும் என்று தான் விரும்புவார்கள் அதே வேளையில் தொழில்நுட்ப ரீதியாக வலுவாக இருக்க மாட்டார்கள் என்ற ஒரு கருத்து நிலவுகிறது.
ஆனால் பாம் கவுர் அவற்றை எல்லாம் கடந்து வந்து இந்த புதிய பொறுப்பினை ஏற்று இருக்கிறார். ஹெச்எஸ்பிசி நிறுவனத்தில் பணிக்கு சேர்வதற்கு முன்பாக சிட்டி பேங்க் மற்றும் ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாண்டில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் இவர்.


Click it and Unblock the Notifications