ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஐடி வேலை செய்பவர்களுக்கு தான் அச்சுறுத்தலாக இருக்கிறது என்றால் வங்கி வேலைகளில் இருப்பவர்களுக்கும் தொல்லை கொடுக்க தொடங்கிவிட்டது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம்முடைய அன்றாட வேலையில் ஒன்றாக கலந்து விட்டது. இந்த நிலையில் பல்வேறு நிறுவனங்களும் ஏஐ தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதிலும் தங்களுடைய தொழிலை ஏஐ உடன் இணைப்பதிலும் தான் கவனம் செலுத்துகின்றன. ஹெச்ஆர் வேலைகள், பிபிஓ வேலைகள் மற்றும் ஐடி வேலைகள் படிப்படியாக மனிதர்கள் வசமிருந்து ஏஐ தொழில்நுட்பத்தின் வசம் சென்ற வண்ணம் இருக்கிறது.

தற்போது வங்கி வேலைகளுக்கும் இதே சூழல் உண்டாகியிருக்கிறது. உலகின் முன்னணி வங்கி சேவை நிறுவனமான ஹெச்எஸ்பிசி நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 10% பேர் அதாவது 20000 பேரை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்திருக்கிறதாம். லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது ஹெச்எஸ்பிசி வங்கி. வங்கி மற்றும் நிதி சேவைகளை வழங்கக்கூடிய இந்த நிறுவனம் உலகம் முழுவதும் புகழ்பெற்றதாக இருக்கிறது.
1865ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 160 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது ஹெச்எஸ்பிசி வங்கி. உலகின் பழமையான வங்கி சேவை நிறுவனமான ஹெச்எஸ்பிசி வங்கி 211000 ஊழியர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இவர்களில் 10% பேர் வேலையை இழக்க உள்ளனர். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
ஹெச்எஸ்பிசி வங்கி தலைமைச் செயல் அதிகாரியாக செயல்படும் ஜார்ஜஸ் எல்டரி ஏஐ தொழில்நுட்பத்தை பல்வேறு பிரிவுகளில் வேலைக்கு அமர்த்த ஆலோசித்து வருகிறாராம். ஏஐ ஏஜெண்டுகளை கொண்டு மனிதர்களை வேலையிலிருந்து நீக்க ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படிப்படியாக ஊழியர் பணிநீக்கம் நடக்கும் என்றும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் என இலக்கு நிர்ணயம் செய்து 20000 பேரும் பணிநீக்கப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
வங்கியின் non client facing roles அதாவது நேரடியாக வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இல்லாத பதவிகளில் இருப்பவர்கள் இந்த பணிநீக்கத்தில் அதிகம் பாதிக்கப்பட உள்ளனர் என கூறப்படுகிறது. ஹெச்எஸ்பிசி வங்கி தங்களுடைய உலக சேவை மையங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் வேலைக்கு தான் முதலில் வேட்டு வைக்க இருக்கிறது.
ஹெச்எஸ்பிசி நிறுவனத்தை மறுகட்டமைப்பு செய்யும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் தான் இந்த பணி நீக்கம் தொடர்பான ஆலோசனை குறித்த செய்தி வெளியாகியிருக்கிறது. செலவினங்களை குறைத்து பணிகளை தொழில்நுட்பங்களோடு ஒருங்கிணைக்க ஹெச்எஸ்பிசி வங்கி தீவிரம் காட்டிவருகிறது. உலகின் பழமையான வங்கியே ஏஐ காரணம் கூறி பணிநீக்க நடவடிக்கை எடுப்பதால் மற்ற வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு இது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications