சென்னை: ஹெச்எஸ்பிசி நிறுவனம் இந்தியாவில் பணக்காரர்கள் மற்றும் சூப்பர் பணக்காரர்களுக்கு என்று பிரீமியம் கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது.
ஹெச்எஸ்பிசி பிரைவே(HSBC Privé) என்ற இந்த கிரெடிட் கார்டு தங்களின் உலகளாவிய தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டது என ஹெச்எஸ்பிசி தெரிவித்துள்ளது. இது உயர் சொத்து மதிப்பு மற்றும் அதி உயர் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள், தொழில் வல்லுநர்கள், தொழில்முனைவோர் மற்றும் 2 மில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்யும் அளவுக்கு சொத்து கொண்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு கிடைக்குமாம்.

முதலில் ஹாங்காங்கில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கிரெடிட் கார்டு தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெரும் பணக்காரர்களின் செலவினங்களுக்கு ஏற்ப இந்த கிரெடிட் கார்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆடம்பர பொருட்கள் மற்றும் ஆடம்பர பயணங்களுக்கு ஏற்ப இந்த கார்டினை பயன்படுத்த முடியும்.
இந்தியாவில் 2023ஆம் ஆண்டில் அதிக சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துவது 87% அதிகரித்துள்ளது. இதில் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவினம் 69%, ஆடம்பர பொருட்களுக்கான செலவினம் 56% உயர்ந்துள்ளது என ஹெச்எஸ்பிசி கூறுகிறது. இந்த புதிய கிரெடிட் கார்டு பயணங்களுக்கான பல சலுகைகளை வழங்குகிறது. ஃபர்ஸ்ட் கிளாஸ் , பிஸினஸ் கிளாஸ் டிக்கெட்டுகள், விமான நிலையங்களில் பிரீமியம் தங்குமிடங்கள், விரிவான பயண காப்பீடு, விசா சேவைகள், சர்வதேச நாணய பரிவர்த்தனைகள் உள்ளிட்ட சேவைகளை வழங்குகிறது.
பிரைவேட் ஜெட்டில் அண்டார்டிகாவுக்கு டிராவல் செய்வது, உலகத்தரம் வாய்ந்த நட்சத்திர விடுதிகளில் தங்குவது , உணவு உண்பது என பிரத்தியேக சலுகைகளை இந்த கார்டில் பெற முடியுமாம். செலிபிரட்டி டிரெய்னர்களிடம் உடற்பயிற்சி, உலகத்தரம் வாய்ந்த கோல்ஃப் மைதானங்களில் விளையாட்டு ஆகிய வசதிகளும் இதில் இருக்கிறது.
இந்த கிரெடிட் கார்டு , ஹெச்எஸ்பிசி வங்கி invitation-only என்ற அடிப்படையில் தான் வழங்குகிறது. சர்வதேச அளவில் தங்களின் தனிப்பட்ட வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த கார்டினை வடிவமைத்திருக்கிறோம் என தெரிவித்திருக்கும் ஹெச்எஸ்பிசி இந்தியாவின் தலைவர் சந்தீப் பத்ரா, எங்களின் சிறப்பான சேவைகளை நம்பி வரும் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் வழங்கும் பிரத்யேக பரிசு இது என கூறியுள்ளார்.
இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது, அவர்கள் ஆடம்பர சேவைகளை பெற முன்னுரிமை தருகின்றனர் எனவே தான் ஹெச்எஸ்பிசி இப்படி ஒரு கிரெடிட் கார்டை உருவாக்கி இருக்கிறது என மாஸ்டர்கார்டின் தெற்காசிய பிரிவு தலைவர் கௌதம் அகர்வால் கூறியுள்ளார். பிரீமியம் சேவைகளையும், அனுபவங்களையும் தேடும் நபர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications