அமெரிக்காவின் முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்று ஹப்ஸ்பாட். இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யாமினி ரங்கன் இருந்து வருகிறார். சுமார் 34 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அவர், சமீபத்தில் தனது தனித்துவமான பணி முயற்சிகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் என்னென்ன கூறியிருக்கிறார்? அதன் பின்னணி என்ன? தனது பணியையும் வாழ்க்கையையும் எப்படி சமமாக கவனித்துக் கொள்கிறார்? என்பது குறித்த பல்வேறு விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
"தி கிரிட்" என்ற பாட்காஸ்டில் உரையாடியபோது, யாமினி ரங்கன் தனது வேலை வாழ்க்கை சமநிலை, வாராந்திர பழக்க வழக்கங்கள் குறித்து பேசியிருந்தார். தென்னிந்தியாவில் பிறந்து வளர்ந்த யாமினி ரங்கன், பாரதியார் பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியல் பட்டம் பெற்றவர். பின்னர் 21 வயதில் அமெரிக்காவிற்கு சென்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், பெர்க்லியின் ஹாஸ் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ பட்டம் பெற்றார்.

தற்போது அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரிகளில் இவரும் ஒருவர். இவருடைய வருமானம் ஆண்டுக்கு 26 மில்லியன் டாலர்கள். அப்படியானால் இந்திய மதிப்புக்கு 2,21,67,91,200 ரூபாய்.
இவர் ஹப்ஸ்பாட் நிறுவனத்தில் பணி புரிவதற்கு முன்பு டிராப்பாக்ஸ், வொர்க் டே மற்றும் SAP போன்ற நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் பணியாற்றி இருக்கிறார். கோவிட்-19 தொற்று நோய் ஏற்பட்ட பிறகு ஹப்ஸ்பாட்டில் இணைந்த அவர், செப்டம்பர் 2021-ஆம் ஆண்டில் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.
தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருக்கும் யாமினி ரங்கன், தனது வாராந்திர ஷெட்யூல் குறித்து பேசுகையில், "வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை வரை தனக்கென நேரத்தை ஒதுக்குவதாகவும், வேலைகளுக்கு வரம்பு அமைத்து அதன்படி நடப்பதாகவும் கூறினார். எனவே வார நாட்களில் அலுவலக பொறுப்புகளில் இருந்து விடைபெற்று கோல்ட்மேன் சாக்ஸில் நிர்வாக இயக்குனராக பணிபுரியும் தனது கணவருடன் நேரத்தை செலவிடுகிறார். வார இறுதி நாட்களில் நடைபயிற்சி, யோகா, தியானம் மற்றும் வாசிப்பு பழக்கங்களில் கவனம் செலுத்துவதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் வேண்டுமென்றே வாரத்தின் தொடக்கத்திற்காக பயன்படுத்துவதாகவும் யாமினி கூறியிருந்தார். வேலை பளுவின் காரணமாக அல்லாமல் தனது தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணிபுரிவதாக கூறினார். ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் தனது ஊழியர்களும் அதே போல இருக்க வேண்டும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று ரங்கன் தெளிவுபடுத்தி இருந்தார்.
அதோடு பாட்காஸ்டில் யாமினி ரங்கன் வேலையில் இருந்து முழுமையாக விலகி இருப்பது தனக்கு கடினமாக இருப்பதாகவும், சும்மா உட்காருவது சிரமமாக இருப்பதாகவும் கூறினார். அவருடைய வார நாட்களில் அதிகாலையிலேயே எழுந்து காலை 7:00 மணி முதல் வேலை செய்ய தொடங்குகிறார். ஏழு மணிக்கு பிறகு அழைப்புகள் வந்தால் அதற்கு பதில் அளிக்கிறார். அதிலிருந்து இரவு 11 மணி வரையில் தனது வேலை நீடிக்கும் என்று கூறியுள்ளார். இந்தியாவில் பிறந்து அமெரிக்காவிற்கு சென்று ஒவ்வொரு பணியிலும் தனது திறமையை காட்டி, தற்போது தலைமை நிர்வாக அதிகாரியாக அமர்ந்து கோடிகளில் புரளும் யாமினி ரங்கன், இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.


Click it and Unblock the Notifications