சீனாவை சேர்ந்த 43 வயதான சியான்சியான் (Qianqian) என்ற பட்டதாரி, தன்னுடைய சோக கதையை சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், அது தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவர், ஒரு காலத்தில் அரசு நிறுவனத்தில் மாதம் சுமார் 50,000 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.6.23 லட்சம்) சம்பாதித்தவர். ஆனால், தனது திருமண வாழ்க்கையின் முடிவில் பணத்தை விடவும், மனதளவில் அவர் இழந்ததுதான் அதிகம் என்று வேதனை தெரிவிக்கிறார்.
திருமண வாழ்வின் இலக்காகப் பணம் மட்டுமே!: அழகான மனைவியின் ஆடம்பர ஆசைகளை தீர்க்க வேண்டும் என்பதற்காக, சியான்சியான் தனது வருமானம் அனைத்தையும் செலவழித்தது மட்டுமின்றி, தனது சொந்த வீட்டைக்கூட விற்றுள்ளார். ஆனால், 7 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு, விவாகரத்து நடந்தபோது, பொதுவான சொத்து என்று எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. இந்த 7 வருடங்களில் அவர்கள் நெருங்கிப் பழகியது கூட சில முறைதான் என்றும் சியான்சியான் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

அவரது மனைவி வேலைக்கு செல்லாமலேயே, விலையுயர்ந்த பொருட்கள், ஆடைகள் (ஒரே மாடலில் 3 நிறங்களில் வாங்குவது), ஃபேஷியல் க்ரீம்களை கூட கை, கால்களில் பயன்படுத்துவது மற்றும் அழகு சாதன சிகிச்சைகள் என ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.
வருமானம் குறைந்ததும் மாறிய காதல் : இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, சியான்சியான் தனது அதிக சம்பளம் கொடுத்த வேலையை இழந்து, தற்போது உணவு விநியோக ஊழியராக மாதம் 10,000 யுவானுக்கும் குறைவாக சம்பாதித்து வருகிறார். அவரது வருமானம் குறைந்தவுடன், மனைவி உடனடியாக விவாகரத்து கோரியுள்ளார். அப்போதுதான், "அவள் என்னைக் காதலிக்கவில்லை; அவளுடைய பண ஆசைகளையும் பொருள் மோகத்தையும் நிறைவேற்ற நான் தயாராக இருந்தேன் என்பதற்காகவே என்னை தேர்ந்தெடுத்தாள்" என்ற கசப்பான உண்மையை சியான்சியான் உணர்ந்துள்ளார்.
சியான்சியான் தனது மனைவியைப் பற்றிப் பேசுகையில், "அவள் தான் நான் மிகவும் நேசித்த பெண். அவளை ஒருபோதும் மறக்க மாட்டேன் என்று ஒரு காலத்தில் நினைத்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த உறவு உருவான விதமே விசித்திரமானது. இருவரும் இணையத்தில் சந்தித்துள்ளனர். சியான்சியானுக்கு அவள் எவ்வளவு அழகானவள் என்பதில் ஈர்ப்பு இருந்தது. சியான்சியானும், அவளது அழகிற்காகவே அவளை ஆக்கிரமிக்க நினைத்ததாகவும், தனக்கு அவளைப் பிடிக்குமா என்று கூட யோசிக்கவில்லை என்றும் ஒப்புக்கொள்கிறார். அதே சமயம், அவரது மனைவி பணத்திற்காக மட்டுமே சியான்சியானை தேர்ந்தெடுத்துள்ளார். இது பரஸ்பர ஏமாற்றத்தின் வெளிப்படையான வடிவமாகவே பார்க்கப்படுகிறது.
இப்போது தனிமையில் இருக்கும் அவர், தான் இழந்தது பணமல்ல; தனது மதிப்புமிக்க இளமை பருவத்தைத்தான் என்று வேதனையுடன் கூறி, தனது முன்னாள் மனைவி மீது எந்த கோபமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். ஒரு உறவில் உண்மை அன்பை விட பணம் முக்கிய இடம் பிடிக்கும்போது, அதன் முடிவு எவ்வளவு சோகமாக இருக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு அழுத்தமான உதாரணமாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications