இந்திய ஆட்டோமொபைல் சந்தை எப்போதும் இல்லாமல் அதிகப்படியான மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. கடந்த 3 வருடத்தில் அனைவருக்கும் பிடித்தமான டீசல் கார்கள் தயாரிப்பு 95 சதவீதம் வரையில் குறைக்கப்பட்டு உள்ளது. எலக்ட்ரிக் கார்கள் விற்பனை எதிர் பார்க்காத வகையில் அதிகரித்து வந்தது.
உலகம் முழுவதும் எலக்ட்ரிக் கார்கள் பின்னால் ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில், இந்தியாவில் புதிய புரட்சியாக எலக்ட்ரிக் கார்களை காட்டிலும் ஹைபிரிட் கார்கள் பிரபலமடைந்து வருகின்றன. இந்த நிதியாண்டில் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு எலக்ட்ரிக் கார் விற்பனையை ஹைப்ரிட் கார் விற்பனை முந்தியுள்ளன.

இந்திய மக்கள் மத்தியில் தற்போது புதிய கார் வாங்குவோர் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஹோண்டா சிட்டி மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் போன்ற ஹைப்ரிட் வாகனங்களை விரும்பி வாங்குகின்றனர்.
பெட்ரோல் கார்களை காட்டிலும் கூடுதல் மைலேஜ், எலக்ட்ரிக் கார்களில் இருக்கும் பேட்டரி ரேஞ்ச் குறித்த அச்சம் மற்றும் சார்ஜிங் உள்கட்டமைப்பு சவால்கள் பற்றிய கவலைகள், இதோடு எலக்ட்ரிக் கார்களின் அதிகப்படியான விலை ஆகிய அனைத்தும் ஹைப்ரிட் கார்களின் விற்பனையை அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது.
நவம்பர் வரையிலான மூன்று மாதங்களில் ஹைபிரிட் வாகனங்களின் விற்பனை மொத்தம் 24,062 ஆக இருந்தது, அதே காலகட்டத்தில் 21,445 எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் தற்போது சந்தையில் 16 எலக்ட்ரிக் கார் மாடல்கள் இருக்கும் இடத்தில் வெறும் 4 ஹைப்ரிட் கார் மாடல்கள் மட்டுமே உள்ளது.
ஹைப்ரிட் வாகன விற்பனையானது இந்த நிதியாண்டில் படிப்படியாக வளர்ச்சி அடைந்து, இறுதியாக கடந்த மூன்று மாதங்களில் EV விற்பனையை முந்தியுள்ளது. ஜூன் காலாண்டில் 14,400 ஹைபிரிட் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் 25,200 எலக்ட்ரிக் கார்கள் விற்பனையாகியுள்ளன.
இதேபோல் செப்டம்பர் காலாண்டில் வாகன உற்பத்தியாளர்கள் 23,900 எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த நிலையில் 22,000 ஹைப்ரிட் கார்களை விற்பனை செய்துள்ளனர். இருப்பினும், செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான 3 மாதத்தில் எலக்ட்ரிக் கார்களை காட்டிலும் ஹைப்ரிட் கார்கள் அதிக விற்பனையை பதிவு செய்துள்ளது.
மூத்த தொழில்துறை நிர்வாகிகள் கூறுகையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பிரத்யேக சார்ஜிங் உள்கட்டமைப்பு தேவை, அதேபோல் ஸ்லோ சார்ஜிங் பிரச்சனை பல கார்களுக்கும், பல சார்ஜிங் ஸ்டேஷனிலும் உள்ளது.
இந்த பிரச்சனை எதுவுமே இல்லாத நிலையில் ஹைப்ரிட் வாகனங்கள் மிகவும் எளிதான காராக மாறியுள்ளது, இதோடு பெட்ரோல் கார்களுடன் ஒப்பிடும்போது சிறந்த மைலேஜ் கிடைக்கும் காரணத்தால் கூடுதலாக சில லட்சம் செலவாயினும் மக்கள் ஹைப்ரிட் வாகனங்களை விரும்பி வாங்க துவங்கியுள்ளனர்.

ஹைப்ரிட் கார்களின் விற்பனை வளர்ச்சிக்கு முக்கியமான காரணங்கள் உள்ளன:
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு: வாடிக்கையாளர்கள் தங்கள் கார்களின் சுற்றுச்சூழல் தாக்கத்தைக் குறைக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஹைப்ரிட் கார்கள் பெட்ரோல் கார்களைக் காட்டிலும் குறைவான மாசு வெளியேற்றுகின்றன.
எரிபொருள் விலைகள்: எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதால், வாடிக்கையாளர்கள் எரிபொருள் திறனுள்ள கார்களை தேடுகின்றனர். ஹைப்ரிட் கார்கள் பெட்ரோல் கார்களைக் காட்டிலும் அதிக மைலேஜ் வழங்குகின்றன.
சார்ஜிங் உள்கட்டமைப்பு சவால்கள்: இந்தியாவில் EV சார்ஜிங் உள்கட்டமைப்பு இன்னும் வளர்ச்சியடைந்து வருகிறது. இது EV வாங்குவதற்கான ஒரு தடையாகும். ஹைப்ரிட் கார்களுக்கு சார்ஜிங் தேவையில்லை.
எது எப்படி இருந்தாலும் ஹைப்ரிட் கார்கள் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை, உற்பத்தி, பயன்பாட்டுக்கு ஒரு பாலமாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications