உலக அளவில் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு மிக முக்கியமாக இருப்பவை டேட்டா சென்டர்கள். உலகம் முழுவதும் பல்வேறு ஐடி நிறுவனங்களும் டேட்டா சென்டர்களை அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றன.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும் ஆந்திர அரசு விசாகப்பட்டினத்திற்கு அருகில் டேட்டா மையங்களுக்கென ஒரு பிரத்தியேக நகரத்தை உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்ததில் இருந்தே மாநிலத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

குறிப்பாக தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மாநிலத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவோம் என வாக்குறுதி அளித்தது. அந்த இலக்கை எட்டும் வகையில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு விசாகப்பட்டினம் அருகே இருக்கக்கூடிய மதுரவாடா நகரத்தில் மிகப்பெரிய ஒரு டேட்டா நகரத்தை உருவாக்குவது தெரியவந்துள்ளது.
ஹைதராபாத் ஹைடெக் சிட்டி பாணியில் இந்த டேட்டா சிட்டி உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த நகரத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு தேவையான டேட்டா சென்டர்கள் நிறுவப்பட இருக்கின்றன. இதற்காக அரசு நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. இங்கு டேட்டா மையத்தை நிறுவுவதற்கு கூகுள் நிறுவனத்திற்கு 80 ஏக்கர் நிலம் வழங்கப்பட உள்ளது.
முன்னதாக ஆந்திராவில் டேட்டா மையம் நிறுவுவது என கூகுள் நிறுவனம் ஆந்திர அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதேபோல டிசிஎஸ் நிறுவனமும் இந்த டேட்டா சிட்டியில் 30 ஏக்கர் நிலத்தில் அலுவலகம் அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருங்கிணைந்த மாநிலமாக ஆந்திரா இருந்தபோது சந்திரபாபு நாயுடுவின் முயற்சியால் உருவாக்கப்பட்டது தான் ஹைதராபாத் நகரம்.
அதேபோல அவருடைய மகனும் தற்போது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் நர லோகேஷ் டேட்டா சிட்டியை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் டேவோஸ் நகரில் பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட நர லோகேஷ் பல்வேறு ஐடி நிறுவனங்களிடமும் விசாகப்பட்டினம் அருகே அமைய இருக்கக்கூடிய டேட்டா சிட்டியில் டேட்டா மையங்களை நிறுவுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். பல்வேறு ஐடி நிறுவனங்களும் ஆந்திராவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் டேட்டா சென்டர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் முதலீடு செய்ய முன்வந்திருப்பதாக நர லோகேஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி ஏஐ நகரமாக இந்த நகரம் மாறும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த டேட்டா நகரத்தில் முதலில் கூகுள் நிறுவனம் தன்னுடைய மிகப்பெரிய டேட்டா மையத்தை நிறுவும் என்றும் அதனை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் இங்கே கால்பதிக்க முன்வரும் என்றும் சொல்லப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications