ஹைதராபாத்: இந்தியாவில் அதிகமான ஐடி நிறுவனங்களுடன் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நகரமாக ஹைதராபாத் இருக்கிறது. வேலைவாய்ப்புக்காக பல்வேறு மாநிலத்தவர்களும் வருகை தருவதால் ஹைதராபாத்தில் நாளுக்கு நாள் மக்கள் தொகையும் அதற்கு ஏற்ப போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது.
போக்குவரத்து நெரிசல் ஒரு புறம் இருந்தால் அதனை சரி செய்ய மேற்கொள்ளப்பட்ட சாலை மேம்பாட்டு பணிகளும் ஆமை வேகத்தில் நடப்பது தெரிய வந்துள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக ஹைதராபாத் நகரில் மேம்பாலம் மற்றும் பிற சாலை கட்டுமான பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன. போதிய நிதி கிடைக்காததால் ஆறு மேம்பாலங்களை அமைக்கும் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகின்றன. இது மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சாலை பணிகளை முடிப்பதற்கு ஹைதராபாத் மாநகராட்சிக்கு 200 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறதாம். குறிப்பாக ஷில்பா லே அவுட், கச்சிமவுலி கூட்டு ரோடு, நல்கோண்டா சாலை, அராம்கர் வன விலங்கு பூங்கா, உப்பல் கூட்டு ரோடு ஆகிய பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
சில இடங்களில் கட்டுமான பணியும் தொடங்கப்பட்டு பாதியிலேயே நிற்கிறது. இந்த பணிகளால் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே நெரிசல் மிகுந்த சாலைகள் இன்னும் போக்குவரத்து நெரிசலை சந்திக்கின்றன.
இதனிடையே ஹைதராபாத் நகரத்தில் 42 சாலை மேம்பாட்டு திட்டங்கள் பரிந்துரை செய்யப்பட்டு,அதில் 36 பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில், ஆறு பணிகள் தொடங்கப்பட்டு பாதியிலேயே நிற்கின்றன. ஏற்கனவே இந்த 36 திட்டப்பணிகளை முடிப்பதற்காக ஹைதராபாத் மாநகராட்சி வங்கி கடன்கள், பத்திரங்கள் மூலம் நிதி திரட்டி விட்டது. தற்போது அவற்றை திரும்ப செலுத்துவதற்கே மாநகராட்சி சிரமங்களை எதிர் கொண்டிருக்கும் நிலையில் புதிதாக கடன்களை வாங்கும் சூழல் இல்லை என சொல்லப்படுகிறது.
ஆனால் ஆறு மேம்பால திட்ட பணிகளை முடிக்க நிதி இல்லை, இந்த சூழலில் மாநகராட்சி என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் மேம்பால பணிகளை நிறைவேற்றுவதற்கு தீவிர முயற்சிகளை எடுத்து வருவதாக ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத் நகரத்தில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைகளை சரி செய்வதற்காக பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் உள்ளிட்டவற்றை அமைப்பதற்கு எஸ்ஆர்டிபி என்ற திட்டத்தை மாநகராட்சி கொண்டுவந்து 5937 கோடி ரூபாய் மதிப்பில் சுமார் 42 சாலை மேம்பாட்டு திட்டங்கள் இதில் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் தான் தற்போது 200 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே அவ்வப்போது மழையும் பெய்வதால் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக ஹைதராபாத் மக்கள் தெரிவிக்கின்றனர்.இயன்ற அளவு வேகமாக இந்த சாலை மேம்பாட்டு திட்ட பணிகளை நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


Click it and Unblock the Notifications