பெங்களூருவை தொடர்ந்து தற்போது ஐதராபாத்திலும் வீட்டு வாடகைகளின் மதிப்பு உயர்ந்து வருவது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஐதராபாத்உள்ளிய நகர உள்ளிட்ட நகரங்களில் ரியல் எஸ்டேட்டுகளின் மதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. அதற்கு ஏற்ப வீட்டு வாடகைகளும் உயர்ந்து வருகின்றன. இந்தியாவின் தொழில் நுட்ப நகரமாக கருதப்படும் பெங்களூருவில் வீட்டு வாடகைகளின் விலை உச்சத்தை எட்டியுள்ளதாக அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
பெங்களூருவில் சாதாரணமாக வேலை பார்க்கும் ஒருவர் வீடு வாடகைக்கு எடுத்து தங்குவது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது ஐதராபாத்திலும் இதே போன்ற ஒரு சூழல் உண்டாகி இருப்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக ஐதராபாத்தில் தற்போது வீடுகளின் வாடகை கணிசமான அளவு உயர்ந்து விட்டதால், வேலைக்காக ஐதராபாத் செல்லும் பலரும் அங்கே வீடுகளை வாடகைக்கு எடுப்பது பெருஞ்சிக்கலாக இருப்பதாக கூறுகின்றனர்.
இதற்கு காரணம் இரண்டு படுக்கையறை கொண்ட வீடுகளின் வாடகை 50,000 ரூபாய் என்ற அளவுக்கு உயர்ந்து விட்டதாக ஒரு ஐடி துறை ஊழியர் ரெட்டிட் தளத்தில் பதிவு செய்துள்ளார். தானும் தன்னுடைய நண்பரும் கொண்டாப்பூர் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக இரண்டு படுக்கை அறை கொண்ட வீட்டினை தேடி வருகிறோம்.
இங்கே வீடு வாடகை 50 ஆயிரம் ரூபாய் மற்றும் பராமரிப்புக்கு என கூடுதல் தொகை ஆகியவற்றை கேட்கிறார்கள். அதற்கு கீழே இந்த பகுதியில் வீடே கிடைக்கவில்லை ,பெங்களூருவை தொடர்ந்து ஐதராபாத்திலும் வாடகைக்கு வீடு கிடைப்பது பெரிய சிக்கலாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
அவரது இந்த பதிவில் பலரும் ஐதராபாத்தில் வீடு கிடைப்பதில் உள்ள சிக்கல்களை பதிவு செய்துள்ளனர். திருமணமாகாதவர்கள், இளைஞர்களுக்கு வாடகை வீடு கிடைப்பதில்லையாம், அப்படியே கிடைத்தாலும் வாடகை அதிகமாக இருப்பதால் ஒருவரால் அதனை சமாளிக்க முடியவில்லை என தெரிவிக்கின்றனர். வீடுகளின் வாடகை ஒருபுறம் உயர்ந்து விட்டது என்றால் இதற்காக வழங்க வேண்டிய புரோக்கரேஜ் தொகையும் அதிகரித்து விட்டதாக சொல்லப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் எனக் கூறியிருப்பதால் பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் தற்போது ரியல் எஸ்டேட் சந்தை வேகம் எடுத்துள்ளது. குறிப்பாக வீடுகளின் வாடகை 30 லிருந்து 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. வீட்டு வாடகையே இந்த அளவு இருப்பதால் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதெல்லாம் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது என புலம்புகின்றனர்.
Written by: Devika


Click it and Unblock the Notifications