ஹைதராபாத்: சென்னை, பெங்களூர் ஹைதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் பெரு நகரங்களில் பெரிய பிரச்சினையாக இருப்பது போக்குவரத்து நெரிசல். குறிப்பாக மழைக்காலங்களில் இது மிகவும் மோசமாகிவிடுகிறது. ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடக்கவே ஒரு மணி நேரம் ஆவதாக மக்கள் கூறுகின்றனர். ஹைதராபாத் நகரத்திலும் இதே சூழல் தான் நிலவுகிறது.குறிப்பாக காலை மற்றும் மாலை வேலைகளில் வாகனங்கள் ஆமை வேகத்திற்கு ஊர்ந்து தான் செல்கின்றன.
போக்குவரத்து நெரிசல்கள் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. போக்குவரத்து காவல்துறையினர் கூட போக்குவரத்து நெரிசல் புகைப்படங்களை வெளியிட்டு இந்த சாலைகளில் செல்வதை தவிர்க்கவும் என்பன உள்ளிட்ட முன்னெச்சரிக்கை பதிவுகளை வெளியிடுகின்றனர். ஹைதராபாத் நகரத்தை பொறுத்தவரை ஹைடெக் சிட்டி பகுதியில் இந்த போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது.

மழைக்காலங்களில் இந்த குறிப்பிட்ட சாலைகளில் போக்குவரத்தை சீர் செய்வதற்காக கூடுதலான காவல்துறையினரை பணியில் நியமிப்பதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இருந்தாலும், மழை பெய்யக்கூடிய சமயங்களில் சாலைகளில் நீர் தேங்குவது, அதிக எண்ணிக்கையிலான மக்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என அலுவலகத்திலிருந்து புறப்படுவது உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்து நெரிசல் இன்னும் மோசம் அடைகிறது என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சாலையில் திடீரென ஒரே சமயத்தில் அதிக வாகனங்கள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என சைதராபாத் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஹைடெக் சிட்டி பகுதியில் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் அவர்கள் கையில் எடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக மையப்படுத்தப்பட்ட போக்குவரத்து அமைப்பை நடைமுறைப்படுத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இந்த பகுதியில் 100 நிறுவனங்கள் செயல்படுகின்றன, அந்த 100 நிறுவனங்களும் ஊழியர்களை அழைத்து வருவதற்காக ஒரே சமயத்தில் வாகனங்களை அனுப்புகின்றன. இதனை ஒருங்கிணைத்து பேருந்து சேவையை வழங்க திட்டமிட்டுள்ளனர்.
வெவ்வேறு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் ஒரே இடத்தில் இருந்து வரும் போது இப்படி ஒருங்கிணைந்த சேவைகள் மூலம் வந்தால் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறையும். இது தொடர்பாக நிறுவனங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு நபரும் தனித்தனியாக காரில் வருவதால் சாலைகளில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் வந்து விடுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது .இதனை குறைப்பதற்காக கார் சேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்தும் நிறுவனங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க சாலையில் நீர் தேங்குவது தான் வாகன மழைக்காலங்களில் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது என இந்த பகுதியில் பணியாற்றக்கூடிய ஐடி துறை ஊழியர்கள் கூறுகின்றனர். மழை பெய்யும் காலங்களில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் ஆவதாக கூறுகின்றனர். இந்த பகுதிகளில் வடிகால் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கையையும் அவர்கள் முன்வைக்கின்றனர்.
மழை காலங்களில் முடிந்தவரை நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட யோசனைகளையும் போக்குவரத்துக் காவல் துறையினர் இந்த நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளனர். அதேபோல ஷிப்ட் நேரங்களில் மாற்றங்கள் கொண்டுவர முடியுமா என்பது குறித்தும் ஆலோசித்து வருவதாக கூறுகின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications