ஹைதராபாத்: தென்னிந்தியாவில் ஹைடெக் சிட்டி என அழைக்கப்படுகிறது ஐதராபாத் நகரம். தற்போது உலகளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் வேகமெடுத்துள்ளன. இந்தியாவிலும் ஏஐ சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஏஐ மையமாக மாற வேண்டும் என்பதில் இந்தியாவின் முக்கிய நகரங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஐதராபாத் நகரை செயற்கை நுண்ணறிவின் தலைநகரமாக மாற்றுவோம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

தெலங்கானா மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டி ஸ்ரீதர், இதனை தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் வர இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிதாக எம்எஸ்எம்ஈ கொள்கைகள் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்த அவர் தங்களது அரசின் இலக்கு ஹைதராபாத் ஏஐ மையமாக மாற்ற வேண்டும் என்பதுதான் எனக் குறிப்பிட்டார்.
தொழில்கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய தெலங்கானா மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டி ஸ்ரீதர் ஐதராபாத் ஏஐ தொழில்நுட்பத்தின் தலைநகரமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக கூறினார்.
மேலும் புதிதாக எம்எஸ்எம்ஈ கொள்கைகளை அறிவிக்கப் போவதாகவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு இந்த புதிய கொள்கை வகுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்டு இந்த கொள்கையை வடிவமைக்கும் பணி நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். தொழில்துறையினர் தங்களின் பரிந்துரைகளை இதில் தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறினார். மேலும் தெலுங்கானாவில் இந்தியன் ஸ்கூல் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் மாடல் அடிப்படையாகக் கொண்டு திறன் பல்கலைக்கழகம் ஒன்று நிறுவப்படும் என தெரிவித்தார்.
இதன் மூலம் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துவது மற்றும் திறமையான பணியாளர்களை உருவாக்குவது குறிப்பாக ஐடி மற்றும் தொழில்துறைக்கு ஏற்ற திறன்களை தற்போதுள்ள இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது ஆகிய பணிகளை மேற்கொள்வதில் இந்த பல்கலைக்கழகம் உதவியாக இருக்கும் என கூறினார்.
மேலும் எம்எஸ்எம்ஈ துறையை மையமாகக் கொண்டு ஹைதராபாத் செயற்கை நுண்ணறிவின் சர்வதேச மையமாக மாற்றுவதே அரசின் இலக்கு என தெரிவித்துள்ளார். இதற்காக உள்ளூர் இளைஞர்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்தார்.
உலகளவில் ஜெனரேட்டிவ் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. பல்வேறு தொழில்களும் தற்போது ஏஐ தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட தொடங்கி விட்டன. இந்நிலையில் இந்தியாவிலும் பல்வேறு ஏஐ நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன. அடுத்த சில ஆண்டுகளில் ஏஐ தொழில்நுட்பமும் அது சார்ந்த வேலைவாய்ப்புகளும் பிரகாசமாக இருக்கும் என கூறலாம்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications