ஹூண்டாய் மோட்டார், இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளர்களில் ஒன்று, அக்டோபர் 15 அன்று ரூ. 27,870 கோடி ($3.3 பில்லியன்) மதிப்பிலான நாட்டின் மிகப்பெரிய IPO வெளியிட உள்ளது. இந்தியாவில் தனது அசுர வளர்ச்சியைப் பணமாக்கிக்கொள்ளும் உத்தியின் ஒரு பகுதியாக, ஐபிஓ வெளியிடுவது மட்டும் அல்லாமல், முதலீட்டாளர்களைக் கவர ஐபிஓ-வுக்கு முன்பு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் அடுத்த பத்து ஆண்டுகளில் ரூ. 32,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐபிஓ-வுக்கு முன்பு இத்தகைய அறிவிப்பு முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது மட்டும் அல்லாமல் நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ-வை தோல்வியில் தள்ளுவதைத் தடுக்க முடியும் என்பது ஹூண்டாய் நிர்வாகத்தின் நம்பிக்கை.

இந்தியாவில் இதற்கு முன்பு எல்ஐசி, பேடிஎம் போன்றவை பெரிய ஐபிஓ என்ற விளம்பரத்துடன் வந்து பெரிய அளவிலான வெற்றியை அடைய முடியாமல் தோற்றுப்போனது. இந்த நிலையில் தான் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் வெற்றிகரமாக மாற்ற ரூ. 32,000 கோடி மதிப்பிலான மாபெரும் முதலீடு திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த முதலீட்டின் குறிப்பிடத்தக்கப் பகுதி, அதன் மின்சார வாகன உற்பத்தித் திறன்களை விரிவுபடுத்தவும், பேட்டரி ஆலையை நிறுவவும் நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலைக்கு ஒதுக்கப்படும். கூடுதலாக, ஹூண்டாய் புனேயில் புதிய தொழிற்சாலைக்கு ரூ. 6,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது, இந்த முதலீட்டின் மூலம் அதன் உற்பத்தி திறனை 0.824 மில்லியன் வாகனங்களில் இருந்து 1.1 மில்லியன் வாகனங்களாக அதிகரிக்கும். இந்த திறன் விரிவாக்கம் தேசிய மற்றும் ஏற்றுமதி விற்பனவையும் அதிகரிக்கும்.
ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் உன்சூ கிம் (Unsoo Kim), புதிய தயாரிப்புகள், எதிர்கால தொழில்நுட்பம் மற்றும் இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்வதற்கான நிறுவனம் உறுதியாக உள்ளது என தெரிவித்தார். அவர் இந்தியா எங்களின் வளர்ந்து வரும் சந்தையாக இருப்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை என கூறிய அவர், இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக நிறுவுவதற்கான திட்டங்களும் உள்ளதாக அறிவித்தார்.
ஹூண்டாய் IPO இந்திய பங்கு சந்தையின் வரலாற்றில் மிகப்பெரியதாக இருக்கும். இந்நிறுவனம் ரூ. 1,865 முதல் ரூ. 1,960 வரையிலான விலையில் நிர்ணயித்துள்ளது, இந்த நிறுவனத்தை சுமார் ரூ. 1.5-1.6 லட்சம் கோடி மதிப்புள்ளதாக மதிப்பிடுகிறது. IPO அக்டோபர் 17 அன்று மூடப்படும், ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான முதலீட்டு கதவுகள் அக்டோபர் 14 தேதியன்று திறக்கப்படும்.


Click it and Unblock the Notifications