இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் உற்பத்தியாளரான ஹூண்டாய் மோட்டார் , சென்னை அருகே உள்ள தனது உற்பத்தி தொழிற்சாலையை பெரிய அளவில் விரிவுபடுத்தத் தயாராகி வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் முன்பு இதற்கான முன்-சாத்திய ஆய்வு அறிக்கையை நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.
இந்திய சந்தையில் ஐபிஓ வெளியிட்டு பெரும் சாதனை படைத்த தென்கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய், சென்னை தொழிற்சாலை விரிவாக்கத்திற்காக சுமார் ரூ.1,500 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்த முதலீட்டின் மூலம் சென்னை ஹூண்டாய் தொழிற்சாலையின் தற்போதைய 5.40 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் இருந்து 7.21 லட்சம் சதுர மீட்டராக ஆலையின் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

இந்த விரிவாக்கத்திற்காக ஹூண்டாய் தொழிற்சாலைக்கு அருகில் இருக்கும் 1.81 லட்சம் சதுர மீட்டர் நிலம் புதிதாகக் கையகப்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. இந்த விரிவாக்கம் மூலம் தொழிற்சாலையின் திறனை மேம்படுத்தவும் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் முடியும் என ஹூண்டாய் இந்தியா நிர்வாகம் நம்புகிறது.
இந்த விரிவாக்கத் திட்டத்தால் சுமார் 155 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் தற்போது 19,700-க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
சுமார் 538 ஏக்கர் பரப்பளவில் பரந்துள்ள இருங்காட்டுக்கோட்டை தொழிற்சாலையில் இருந்து ஆண்டுக்கு 8.50 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த 1500 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலையை நவீனமயமாக்கம் செய்வது மூலம், ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை அதிகரிக்க முடிவு செய்துள்ளது ஹூண்டாய் இந்தியா நிர்வாகம்.
இந்த நிலையில் இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய ஐபிஓ வெளியிட்ட நிறுவனம் என்ற சாதனையைப் படைத்துள்ள ஹூண்டாய் மோட்டார் இறுதி நாளான அக்டோபர் 17 ஆம் தேதியன்று முழுமையாக சப்ஸ்க்கிரைப் செய்யப்பட்டது. இந்த ஐபிஓ-வில் முதலீட்டாளர்கள் 9.97 கோடி பங்குகளை மட்டுமே விற்பனை செய்த நிலையில், 23.63 கோடி பங்குகளுக்கு சப்ஸ்கிரைப் செய்யப்பட்டு உள்ளது.
அக்டோபர் 15 ஆம் தேதி ஹூண்டாய் ஐபிஓ-வுக்கான கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் அக்டோபர் 17 ஆம் தேதி மூடப்பட்டது. இறுதி நாள் முடிவில் ரீடைல் முதலீட்டாளர் பிரிவு 50% சப்ஸ்கிரைப் செய்யப்பட்டது, அதே நேரத்தில் நிறுவனமல்லாத முதலீட்டாளர் பிரிவு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்கில் 60% சப்ஸ்கிரைப் செய்யப்பட்டது.
மேலும் ஒரு பங்குக்கு ரூ.186 தள்ளுபடி வழங்கப்பட்ட ஊழியருக்கான கோட்டாவில் மூன்றாம் நாளில் 1.74 மடங்கு பங்குகளுக்கு சப்ஸ்கிரைப் செய்யப்பட்டது. இதன் மூலம் ஹூண்டாய் ஐபிஓ கிட்டத்தட்ட வெற்றி என அறிவிக்கலாம் என்ற நிலை இருந்தாலும் ரீடைல் முதலீட்டாளர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டாதது மூலம் பட்டியலிடும் போது ப்ரீமியம் விலையில் வருமா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.


Click it and Unblock the Notifications