இந்தியா ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் ஆதிக்கம் கொண்டிருக்கும் உள்நாட்டு நிறுவனங்கள் சமீப காலமாக வெளிநாட்டு நிறுவனங்களின் அடுத்தடுத்து அறிமுகத்தால் சில தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
இந்தியாவில் செடான் மற்றும் ஹேட்ச்பேக் கார் சந்தையாக இருந்த நிலையில் எம்ஜி மோட்டார்ஸ், கியா ஆகியவற்றின் அறிமுகத்தின் மூலம் மொத்த சந்தையும் தற்போது எஸ்யூவி சந்தையாக மாறி வருகிறது. இதற்கிடையில் எலக்ட்ரிக் வாகனம், ஹைப்ரிட், சிஎன்சி, ஹைட்ரஜன் என பல எரிபொருள் மாற்றங்கள் வேறு.

இந்த கலவையான சந்தையில் ஒவ்வொரு பிராண்டும் தனக்கென தனி வாடிக்கையாளர் கூட்டத்தை வைத்திருக்கிறது. இதில் ஹூண்டாய் ஒரு படிக்கு மேல் ஹேட்ச்பேக் மூலம் எஸ்யூவி வரையில் அனைத்து பிரிவிலும் கார் மாடல்களை வைத்துக்கொண்டு சிறப்பான விலையில் கார்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது.
அடுத்ததாக எலக்ட்ரிக் வாகனங்களை குறித்து களத்தில் இறங்கியுள்ள ஹூண்டாய், இந்தியாவில் இருக்கும் தனது நற்பெயரைப் பணமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழ்நாட்டை முக்கிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தளமாகக் கொண்டிருக்கும் ஹூண்டாய் பல மாத ஆய்வுக்குப் பின்பு தற்போது செபி-யிடம் DRHP அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
தென் கொரியாவின் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், தனது இந்திய கிளை நிறுவனத்தை இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிட முடிவு செய்து IPO மூலம் 17.5% வரையிலான பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
ஐபிஓ வெளியிடுவதற்காக இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான SEBI-யிடம் வெள்ளிக்கிழமை சமர்ப்பிப்பதாகக் கூறப்பட்ட நிலையில், ஹூண்டாய் தாக்கல் செய்யப்பட்ட வரைவு கடிதங்கள் சனிக்கிழமை செபி தளத்தில் அப்டேட் ஆகியுள்ளது. இதன் மூலம் ஹூண்டாய் இந்திய பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிடுவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.

இந்த ஐ.பி.ஓ மூலம் சுமார் ரூ.25,000 கோடி (US $3 பில்லியன்) திரட்ட ஹூண்டாய் மோட்டார் திட்டமிட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் ஐபிஓ இந்தியாவில் இதுவரை நடந்த மிகப்பெரிய ஐ.பி.ஓ ஆக இருக்க வாய்ப்புள்ளது.
ஹூண்டாய் இந்தியா தனது மொத்தம் 812 மில்லியன் பங்குகளில் இருந்து, இந்த ஐ.பி.ஓவில் அதிகபட்சமாக 142 மில்லியன் பங்குகளை விற்பனைக்கு வைக்கும் என்று SEBI-யிடம் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
மாருதி சுசூகிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் உற்பத்தியாளராக இருக்கும் ஹூண்டாய் , இந்த ஐ.பி.ஓவில் புதிய பங்குகளை (Fresh Issue) வெளியிடாது.
ஹூண்டாய் தனது முழு உரிமையிலான இந்திய நிறுவனத்தில் உள்ள பங்குகளை, offer for sale என்ற முறையில் சில்லறை மற்றும் பிற முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டு மாருதி சுசூகி பங்கு வெளியீட்டிற்குப் பிறகு, கடந்த இரு தசாப்தங்களில் இந்தியாவில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் முதல் கார் உற்பத்தியாளர் ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications