டெல்லி: அதிக மாசு வெளியிடக்கூடிய வாகனங்களை தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் மகேந்திரா & மகேந்திரா ,ஹூண்டாய், கியா உள்ளிட்ட 8 கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு 7300 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக ஹூண்டாய் நிறுவனத்திற்கு 2800 கோடி ரூபாய் அபராதமும் ,மகேந்திரா நிறுவனத்திற்கு 1800 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கியா நிறுவனம் 1300 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் வெளியானதை அடுத்து பங்குச்சந்தையில் மகேந்திரா , ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் சரிவை கண்டன. நவம்பர் 28ஆம் தேதி மகேந்திரா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3 சதவீதம் சரிந்து 2914 ரூபாய் என வர்த்தகமானது. அதேபோல ஹூண்டாய் நிறுவனத்தின் பங்கு மதிப்பும் 0.40 சதவீதம் சரிவை கண்டுள்ளது.
மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படக்கூடிய எரிபொருள் பயன்பாட்டு கமிட்டி ( Bureau of Energy Efficiency ) இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்கள் சராசரியாக குறிப்பிட்ட அளவு மைலேஜ் வழங்க வேண்டும் என சில விதிமுறைகளை வகுத்துள்ளது.
இந்த விதிமுறைகள் Corporate Average Fuel Efficiency என அழைக்கப்படுகின்றன. 2023ஆம் ஆண்டு முதல் இந்த விதிகள் அமலுக்கு வந்தன. இதன்படி ஒரு வாகனம் தயாரிக்கப்பட்டு 100 கிலோ மீட்டர் வரை இயக்கப்பட்டால் அந்த வாகனம் 4.78 லிட்டருக்கு அதிகமான எரிபொருளை செலவு செய்யக்கூடாது, அதைப்போல ஒரு கிலோ மீட்டருக்கு 113 கிராமுக்கு மேல் கார்பன் டை ஆக்சைடை வெளியிடக் கூடாது என்பதுதான் அரசின் விதிமுறை. இதனை மீறினால் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கப்படும் வாகனங்களை சோதனை செய்து ஒவ்வொரு மாடலும் எவ்வளவு எரிபொருளை பயன்படுத்துகிறது எவ்வளவு மாசனை வெளியிடுகிறது என்பது கணக்கிடப்படுகிறது .
தற்போது ஹூண்டாய் நிறுவனம் தான் அதிகபட்ச அபராதத்தை செலுத்த வேண்டி இருக்கிறது 2023 ஆம் நிதி ஆண்டில் இந்த நிறுவனம் 4709 கோடி ரூபாய் வருமானமாக ஈட்டிய நிலையில் அதில் 60 சதவீத தொகையை தற்போது மத்திய அரசுக்கு அபராதமாக செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே ஜனவரி 1ஆம் தேதி தான் இந்த திட்டம் அமலுக்கு வந்ததால் நிதியாண்டு முழுமைக்கும் இந்த அபராத தொகையை விதிப்பது சரியல்ல என இந்த நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications