இந்திய பங்குச்சந்தையில் புதிய அத்தியாயம் பிறக்கப்போகிறது, 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கார் நிறுவனத்தின் ஐபிஓ இந்தியாவில் நடக்க உள்ளது. இந்திய பங்குச்சந்தையின் வேகமான வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று ஐபிஓ.
நரேந்திர மோடியின் 3வது ஆட்சி அமைந்துள்ளதை தொடர்ந்து, இந்தியாவில் இருக்கும் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிட்டு அதிகப்படியான முதலீடுகளை திரட்டும் பணியில் இறங்கியுள்ளது. இதில் குறிப்பாக இந்தியாவில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட ஆர்வம் காட்டி வருகிறது.

அந்த வகையில் தென் கொரிய நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் இந்திய பிரிவு, அடுத்த இரண்டு வாரங்களில் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி அமைப்பிடம் (SEBI) ஐபிஓ வெளியிடுவதற்கான 'டிராஃப்ட் ரெட் ஹெரிங் ப்ராஸ்பெக்டஸ் (DRHP)' தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் கார் நிறுவனத்தின் ஐபிஓ: இது வெற்றிகரமாக இருந்தால், 2003 ஆம் ஆண்டில் நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி பட்டியலிடப்பட்டதில் இருந்து, 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் எந்தொரு கார் உற்பத்தியாளரும் ஐபிஓ வெளியிடாத நிலையில், இதை ஹூண்டாய் மோட்டார் இந்தியா முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவான செயல்முறை: DRHP அறிக்கை தாக்கல் செய்த பிறகு, ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிர்வாகம், அடுத்த மாதம் முதல் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் முதலீட்டாளர்களுக்கான சந்திப்புகளை (Roadshows) தொடங்க வாய்ப்புள்ளது என்று ஒரு முதலீட்டு வங்கியாளர் தெரிவித்தார். இது இன்னும் முடிவு செய்யப்படாத ரகசிய பேச்சுவார்த்தையாக உள்ளது.
செபியின் ஒப்புதல்: DRHP தாக்கல் செய்த 60-90 நாட்களுக்குள் செபி ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் பங்கு வெளியீடு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் சந்தைக்கு வரும் வாய்ப்பு உள்ளது.
ஐபிஓவை நிர்வகிக்கும் வங்கிகள்: ஐசிஐசி வங்கி, மோர்கன் ஸ்டான்லி, கோடக் மஹிந்திரா, எச்எஸ்பிசி மற்றும் ஜேபி மோர்கன் ஆகிய முதலீட்டு வங்கிகள் இந்த ஐபிஓவை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ளன.
ஈக்விட்டி சந்தையின் வளர்ச்சியைப் பயன்படுத்தும் திட்டம்: கடந்த பத்தாண்டுகளில் உலகளவில் ஐந்து சிறந்த பங்குச்சந்தைகளில் ஒன்றாக, இந்திய பங்குச்சந்தை 14% வருடாந்திர லாபத்தை வழங்கியுள்ளது. இந்த ஈக்விட்டி சந்தையின் வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ளவே ஹூண்டாய் இந்த ஐபிஓவை திட்டமிட்டுள்ளது.
மதிப்பீடு: ஹூண்டாய் இந்திய துணை நிறுவனத்திற்கு 22-28 பில்லியன் டாலர் மதிப்பை இலக்காகக் கொண்டுள்ளது என்றும், 15-20% பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய பரிசீலித்து வருவதாகவும். இந்த பங்குகள் அனைத்தும் தென் கொரியாவின் தாய் நிறுவனத்தின் விற்பனை (Offer for Sale) ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications