இந்தியா ஆட்டோமொபைல் உற்பத்தி துறையில் பெரும் பங்கீட்டை கொண்டு உள்ள தமிழ்நாடு மாறி வரும் எலக்ட்ரிக் வாகனங்கள், மாற்று எரிபொருள் வாகன உற்பத்தியில் பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்க்க தீவிரமான முயற்சிகளை செய்துக்கொண்டு இருந்த நிலையில் இதற்கான பலன் கிடைத்துள்ளது.
சர்வதேச ஆட்டோமொபைல் உற்பத்தியில் தனக்கென தனி இடத்தை ஹூண்டாய் மற்றும் அதன் கிளை நிறுவனமான கியா ஆகியவை பெற்றுள்ள நிலையில், EV துறையிலும் முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும் என்ற மாபெரும் இலக்குடன் ஹூண்டாய் மோட்டார் இந்தியா தமிழ்நாட்டில் 15000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

ஹூண்டாய் மோட்டார், எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் அதை சார்ந்த கட்டமைப்புகள், உலக நாடுகளில் தற்போது வேகமாக பிரலமாகி வரும் ஹைட்ரஜன் பியூயல் டெக்னாலஜிஸ் மொபிலிட்டி ஆகியவற்றுக்கான சுமார் 15000 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தென்கொரியாவின் ஹூண்டாய் மற்றும் தமிழ்நாடு அரசு வியாழக்கிழமை கையெழுத்திட உள்ளதாக தெரிகிறது.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் மாற்று எரிபொருள் வாகனங்களுக்காக தீட்டியுள்ள மாபெரும் திட்டத்தின் முக்கிய பங்கீட்டை தமிழ்நாட்டில் இருந்து செய்ய முடிவு செய்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவல் படி அடுத்த 7-10 வருடத்தில் தமிழ்நாட்டில் ஹூண்டாய் நிறுவனம் 15000 முதல் 20000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்ய உள்ளதாக தெரிகிறது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் இதுவரை இந்தியாவில் 4 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 20000 கோடி ரூபாய் என்பதி கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலருக்கு மேல்.

ஹூண்டாய் நிறுவனம் சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தென் கொரியாவுக்கு அடுத்தப்படியாக 2வது பெரிய தொழிற்சாலையை கொண்டு இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் வருடத்திற்கு 740000 கார்களை உற்பத்தி செய்ய முடியும். இதோடு இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹூண்டாய் தான் முன்னணி ஏற்றுமதி நிறுவனமாக உள்ளது.
இந்த நிலையில் ஹூண்டாய் 2030 ஆம் ஆண்டுக்குள் தனது உலகளாவிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பை 36.4 லட்சமாக உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதோடு உலகிலேயே டாப் 3 EV கார் பிராண்டாக ஹூண்டாய் வர வேண்டும் என்ற இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் மாபெரும் EV கனவு திட்டத்தில் ஹூண்டாய், கியா, Genesis ஆகிய பிராண்டுகளில் கார்களை தயாரிக்க உள்ளது. இது மட்டும் அல்லாமல் சுமார் 31 EV கார் மாடல்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது ஹூண்டாய். ஹூண்டாய் நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் மொத்தம் 7,00,811 கார்களை விற்பனை செய்துள்ளது, இது 2021 ஆம் ஆண்டு விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் 10.3 சதவீதம் அதிகமாகும்.
இதேபோல் ஹூண்டாய் நிறுவனம் தனது ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் வாகனங்களை தயாரிக்கும் திட்டத்தை, அதன் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தும் முக்கிய பணிகளையும் சென்னையில் இருந்து செய்ய உள்ளது. இதற்கான அடிப்படை திட்டம் தான் தமிழ்நாட்டில் 20000 கோடி முதலீடு.


Click it and Unblock the Notifications