சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கிரிக்கெட் வீரராக வேண்டும் என்பதே தன்னுடைய சிறு வயது கனவாக இருந்தது என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை தலைமை இடமாக கொண்டு ஐடி பிரிவில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது சோஹோ நிறுவனம். இதனை நிறுவியவர் ஸ்ரீதர் வேம்பு.
நாட்டின் பொருளாதாரம் குறித்தும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது எப்படி, மற்ற நாடுகளில் எல்லாம் எப்படி தொழில்கள் முன்னேறுகின்றன என்பது குறித்து அவ்வப்போது தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு செய்து வருபவர் . பல்வேறு இளைஞர்களுக்கும் முன்னுதாரணமாக இருந்து வருகிறார். இவர் சிறுவயதில் தான் கிரிக்கெட்டராக வேண்டும் என நினைத்ததாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

9 வயது சிறுமி ஒருவர் தன்னிடம் என்னைப்போல சிறுவயதாக இருந்தபோது நீங்கள் என்னவாக வேண்டும் என நினைத்தீர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு 9 வயதாகும் போது நான் ரயில் எஞ்சின் டிரைவராக வேலைக்கு செல்ல வேண்டும் என எண்ணினேன், பின்னர் 12 வயதாகும்போது மிகப்பெரிய கிரிக்கெட் வீரராக உருவாக வேண்டும் என ஆசை கொண்டிருந்தேன் என உண்மையை கூறியதாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 15 வயதாகும்போது எனக்கு கிரிக்கெட் விளையாடுவது வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் அதற்கான திறமை பெரிய அளவில் தன்னிடம் இல்லை என்பதை நான் புரிந்து கொண்டேன் என கூறியுள்ளார்.
அதன் பிறகு நான் என்னுடைய படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினேன், கணிதம் மற்றும் இயற்பியல் பாடப்பிரிவுகளில் கவனம் செலுத்தி நன்றாக படிக்க தொடங்கினேன் என குறிப்பிட்டு இருக்கிறார் . இதன் மூலம் ஐஐடி ஜேஈஈ தேர்வில் வெற்றி பெற்றதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். 25 வயதாகும் போது தனக்கு சாஃப்ட்வேர் பிரிவில் ஆர்வம் இருப்பதை உணர்ந்தேன் என கூறியுள்ளார்.
முழுக்க முழுக்க இதன் மீது காதல் கொண்டு தான் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன் என குறிப்பிட்டு இருக்கிறார். அதாவது 25 வயதுக்கு பிறகு தான் எதில் சிறந்து செயல்படுகிறேன் என்பதை நான் உணர்ந்தேன் என தெரிவித்திருக்கிறார். தற்போது சோஹோ நிறுவனம் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக மாறி வருகிறது. குறிப்பாக 25 இடங்களில் அலுவலகங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இதில் இணைந்து வேலை செய்கின்றனர்.
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ஸ்ரீதர் வேம்பு 51-வது இடத்தில் இருக்கிறார். அவருடைய சொத்து மதிப்பு 5.8 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. சிறு வயதில் தான் எப்படி ரயில் என்ஜின் ஓட்டுனராக ஆக வேண்டும் என நினைத்தேனோ தற்போது கூட எனக்கு ரயில்கள் என்றால் மிகவும் பிடிக்கும் ரயில் பயணம் என்றால் மிகவும் பிடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 57 வயதாகக்கூடிய ஸ்ரீதர் வேம்பு தமிழ்நாட்டில் அனைத்து கிராமப்புறங்களையும் இணைக்கும் வகையில் ரயில் சேவைகளை கொண்டு வர வேண்டும் என்பதே தன்னுடைய ஆசை என தெரிவித்திருக்கிறார் .


Click it and Unblock the Notifications