சென்னை: உலகிலேயே பழமையான ஐடி மற்றும் டெக் ஹார்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றான ஐபிஎம், சீனா- அமெரிக்கா மத்தியிலான வர்த்தக போர் பிரச்சனை காரணமாக அந்நாட்டில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்கள் பட்டியலில் சேர்ந்துள்ளது.
சீனா- அமெரிக்கா, சீனா - தைவான் மத்தியிலான புவிசார் அரசியல் பிரச்சனைகள் காரணமாக, முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் பல சீனாவில் தங்கள் செயல்பாடுகளை குறைத்து வருகின்றன.

இந்த நிலையில் ஐபிஎம் நிறுவனம் சீனாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) பிரிவுகளை மூடுவதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் டெலியான் போன்ற நகரங்களில் 1000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சீனாவில் வெளியாகும் ஒரு செய்தித்தாளின் அறிக்கையின்படி, ஐபிஎம் (IBM) நிறுவனம் தனது சீனா மேம்பாட்டு ஆய்வகம் (China Development Lab) மற்றும் சீனா சிஸ்டம்ஸ் லேப் (China Systems Lab) ஆகியவற்றை மூடவுள்ளதாகவும், இதன் காரணமாக 1000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த வார இறுதியில் ஐபிஎம் (IBM) நிறுவனத்தின் சீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஊழியர்கள் நிறுவனத்தின் intranet மற்றும் ஊழியர் சார்ந்த இதர சேவைகளை அணுக முடியாமல் போனது.
அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட ஐபிஎம் (IBM) நிறுவனம், திங்கட்கிழமை காலை நடைபெற்ற கூட்டத்தில் பணி நீக்கங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாக சில சமூக வலைத்தள பதிவுகளும் வெளியாகியுள்ளது
சீனாவில் பணி நீக்கங்களை ஐபிஎம் (IBM) நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது, இருப்பினும் பணி நீக்கங்கள் குறித்த விரிவான விவரங்களை வழங்கவில்லை. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக நிறுவனங்கள் தொடர்பாகப் பதற்றங்கள் நிலவி வரும் சூழ்நிலையில் எரிக்சன், டெஸ்லா, அமேசான்.காம் மற்றும் இன்டெல் போன்ற நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன, இதன் காரணமாகப் பல நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன.


Click it and Unblock the Notifications