பிரபல டெக் நிறுவனமான ஐபிஎம் தங்கள் நிறுவனத்தில் மனிதவளத்துறை பணிகளில் இருந்த 200 பேரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பணிக்கு அமர்த்தியுள்ளது.
உலக அளவில் ஏஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கோடிங் உள்ளிட்ட பணிகளில் தான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் ஈடுபடுத்தப்பட்டு வந்தன என்றால் தற்போது ஹெச்ஆர் எனப்படும் மனிதவளத் துறை வேலைகளையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் கையகப்படுத்தி வருகின்றன.

உலகின் முன்னணி நிறுவனமான ஐபிஎம் தங்கள் நிறுவனத்தில் மனிதவளத்துறை பணிகளில் மனிதர்களை நீக்கிவிட்டு ஏஐ ஏஜென்ட்களை வேலையில் சேர்த்திருப்பதாக கூறியுள்ளது. இதனால் ஐபிஎம் நிறுவனத்தில் ஹெச்ஆர் பிரிவில் வேலை செய்து வந்த 200 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர். ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அரவிந்த் கிருஷ்ணாவே இந்த தகவலை வெளியிட்டிருக்கிறார்.
தங்களுடைய நிறுவனத்தில் சுமார் 200 ஹெச்ஆர் வேலைகளை நாங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திடம் வழங்கி விட்டோம் எனக் கூறியிருக்கிறார். உலக அளவில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களுடைய வேலைகளை ஏஐ சார்ந்தவயாக மாற்றி வருகின்றன. மனிதர்கள் செய்து வந்த குறிப்பாக ஒரே மாதிரியாக திரும்பத் திரும்ப செய்யக் கூடிய வேலைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை வேலை செய்ய வைக்கின்றன. இதனால் மனிதர்கள் பலரும் தங்களுடைய வேலை வாய்ப்புகளை இழந்த வண்ணம் இருக்கின்றனர்.
அதன் தாக்கம் தான் தற்போது ஐபிஎம் நிறுவனத்திலும் ஏற்பட்டிருக்கிறது. ஐபிஎம் நிறுவனம் தங்களுடைய பெரும்பாலான பணிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தோடு ஒருங்கிணைப்பதற்கு முடிவு செய்து இருக்கிறது. ஹெச்ஆர் துறையில் 200 பேரை பணியிலிருந்து நீக்கி விட்டோம் என்பதற்காக எங்கள் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துவிடவில்லை என தெரிவித்திருக்கும் அரவிந்த் கிருஷ்ணா , மார்க்கெட்டிங், சேல்ஸ் மற்றும் சாப்ட்வேர் இன்ஜினியரிங் உள்ளிட்ட பிரிவுகளில் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார்.
மனிதர்களோடு பேசக்கூடிய வேலை ,சிக்கலான பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கும் பொறுப்பு உள்ளிட்ட பணிகளில் எல்லாம் தங்கள் நிறுவனத்தில் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக செய்யக்கூடிய வேலைகளுக்கு நாங்கள் தான் இனி ஏஐ-யை பணியில் அமர்த்த இருக்கிறோம் என அவர் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார் .
ஒரே மாதிரியான வேலைகளை செய்வதற்கு ஏஐ நியமனம் செய்வதன் மூலம் அங்கிருக்கும் ஊழியர்களை பணி நீக்கம் செய்து அந்த பணத்தை கொண்டு மனிதர்கள் தேவைப்படும் துறைகளில் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து அவர்களுக்கு சம்பளம் வழங்க பயன்படுத்திக் கொள்கிறோம் என அவர் கூறியிருக்கிறார்.
தரவுகளை வரிசைப்படுத்துவது, ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவது ,உள்ளார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது உள்ளிட்டவற்றை ஏஐ மேற்கொள்வதாக தெரிவித்திருக்கிறார் .செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதே தங்களுடைய நோக்கம் என அரவிந்த் கிருஷ்ணார் கூறியிருக்கிறார் . மேலும் இந்த ஏஜெண்டுகள் தங்கள் நிறுவனத்தில் ஊழியர்களின் தகவல்களை சரி பார்ப்பது, ஊழியர்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடங்களுக்கு பணி மாற்றம் செய்யும் நடைமுறைகள் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications