உலகின் பழமையான டெக் சேவை நிறுவனங்களில் ஒன்றான ஐபிஎம், இன்றும் ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவழைப்பதில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
இந்தியாவில் அனைத்து ஐடி சேவை நிறுவனங்களும் ஊழியர்களைக் கட்டாயம் வாரத்தில் 3 நாள் அலுவலகம் வரவைத்துள்ளது. இதனால் வொர்க் ப்ரம் ஹோம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுப் பல மாதங்களானது. அமெரிக்காவில் கூடக் கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா, டெஸ்லா, அமேசான் என அனைத்தும் Work From Home ரத்து செய்துள்ளது.

இந்த நிலையில் இண்டர்நேஷ்னல் பிஸ்னஸ் மெஷின்ஸ் கார்ப் என்ற IBM பல மாத முயற்சிகளுக்குப் பின்பு கடுமையான கட்டுப்பாடுகள் உடன் ஈமெயில் அனுப்பியுள்ளது. இந்த ஈமெயிலில் அனைத்து மேனேஜர்களும் அலுவலகம் வர வேண்டும் என்றும், தொலைவில் இருக்கும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு அருகில் குடிபெயரவும் அல்லது பணியில் இருந்து ராஜினாமா செய்யவும் எனத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க வர்த்தகத்தில் பணியாற்றும் அனைத்து மேனேஜர்களும் உடனடியாக அவர்களுடைய அதிகாரப்பூர்வ அலுவலகத்திலேயோ அல்லது அருகில் இருக்கும் ஐபிஎம் கிளை அலுவலகத்திலேயோ வாரத்திற்கு 3 நாள் பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. ஊழியர்களின் வருகையைக் கண்காணிக்கப்படும் என ஐபிஎம் HR பிரிவின் உயர் துணை தலைவர் ஜான் கிரான்ஜர் இந்த உத்தரவில் தெரிவித்தார்.
மருத்துவப் பிரச்சனை அல்லது ராணுவ சேவை ஆகிய இரு பிரிவினர் தவிர வீட்டில் இருந்து பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் அலுவலகம் வர வேண்டும். மேலும் அலுவலகத்தில் இருந்து 50 மையிலுக்குத் தொலைவில் இருக்கும் மேனேஜர்கள் அலுவலகத்திற்கு அருகில் குடிபெயர உத்தரவிடப்பட்டு உள்ளது.
தொலைவில் இருக்கும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு அருகில் குடிபெயர முடியாவிட்டால், நிறுவன பணியில் இருந்து வெளியேறலாம் எனவும் HR பிரிவின் உயர் துணை தலைவர் ஜான் கிரான்ஜர் தெரிவித்தார்.
ஐபிஎம் சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா நீண்ட காலமாக ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும் என்றும், வொர்க் ப்ரம் ஹோம் எல்லாம் வேலைக்கு ஆகாது எனக் கூறி வந்தார்.


Click it and Unblock the Notifications