டெக் மற்றும் வர்த்தகத் துறையில் 100 வருடங்களுக்கும் அதிகமாக வர்த்தகத்தையும் செய்து வரும் ஐபிஎம் தனது பிஸ்னஸ் அப்ளிகேஷனை கண்காணிப்பு செய்யும் மென்பொருளை உருவாக்கியுள்ள டர்போனாமிக் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
ஐபிஎம் கடந்த சில வருடங்களாகவே வர்த்தகச் சரிவையும், பாதிப்பையும் எதிர்கொண்டு வரும் நிலையில், பல்வேறு நிர்வாக மாற்றம், வர்த்தகம் விரிவாக்கம் மூலம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் 2019ஆம் ஆண்டு 34 பில்லியன் டாலருக்கும் ரெட் ஹேட் நிறுவனத்தை ஐபிஎம் கைப்பற்றியது, இதைத் தொடர்ந்து தற்போது டர்போனாமிக் நிறுவனத்தை 1.5 பில்லியன் டாலர் முதல் 2 பில்லியன் டாலர் வரையிலான தொகைக்குக் கைப்பற்றியுள்ளது.
இப்புதிய நிறுவன கைப்பற்றல் மூலம் நியூயார்க் பங்குச்சந்தையில் ஐபிஎம் பங்குகள் 1.24 டாலர் வரையில் உயர்ந்து 144.24 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
ஐபிஎம் நிறுவனத்தில் செய்யப்பட்ட மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்று, இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியரான அரவிந்த் கிருஷ்ணா-வை நியமித்தது.
அரவிந்த் கிருஷ்ணா தலைமையில் பல பிரிவுகளில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது கரும்புள்ளியாக இருந்தாலும், இவரது நிர்வாகத்தின் கீழ் ஐபிஎம் டர்போனாமிக் நிறுவனத்துடன் சேர்ந்து சுமார் 11 நிறுவனங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஐபிஎம் நிறுவனத்தின் ஆட்டோமேஷன் திட்டத்தின் மிக முக்கியமான பங்கை டர்போனாமிக் நிறைவு செய்யும் எனவும், இதன் மூலம் பல சேவைகளின் தரத்தைப் பெரிய அளவில் மேம்படுத்த முடியும் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications