சமீபகாலமாக பணிநீக்கங்கள் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் ஐபிஎம் நிறுவனம் சுமார் 8000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இந்த பணி நீக்கங்கள் குறிப்பாக நிறுவனத்தின் ஹியூமன் ரிசோர்ஸ் பிரிவில் பணிபுரியும் ஊழியர்களை பாதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் பணி நீக்கங்களுக்கு முக்கிய காரணம் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி.
ஐபிஎம் நிறுவனமும் சமீபத்தில் HR கையாளும் அனைத்து வேலைகளையும் செய்யக்கூடிய AI தொழில்நுட்பத்தை உருவாக்கியது. இதன் விளைவாக 200 ஊழியர்கள் வேலை இழந்தனர். அதோடு வணிகங்களும் வளர்ந்து வரும் செயல்பாடுகளுக்கு AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் அதிகமான பணிகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகின்றன.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அரவிந்த் கிருஷ்ணா, "நிறுவனம் செயல் திறனை அதிகரிக்கும் பொருட்டு AI மற்றும் ஆட்டோமேஷனை நோக்கி நகர்ந்து வருவதாக குறிப்பிட்டார். தொழில்நுட்ப மாற்றங்களால் இதில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் அனைவரும் மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் போன்ற பிற பணிகளுக்கு திருப்பி விடப்படுகின்றனர் என்றும் கூறினார்.
வாடிக்கையாளர்களுக்கு ஐபிஎம் AI தொழில்நுட்பத்தை வழங்குவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த மாதம் ஐபிஎம் தனது வருடாந்திர திங்க் கான்பரன்சில் ஏஐ ஏஜெண்டுகளை அறிமுகம் செய்தது. இந்த ஏஜென்ட்கள் நிறுவனங்களுக்கு பல உதவிகளை செய்யும் என்றும் குறிப்பிட்டது. முக்கியமாக இவை ஓபன்AI, அமேசான், மைக்ரோசாப்ட் ஆகிய முன்னணி தளங்களுடன் ஏற்கனவே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
பணி நீக்கங்கள் குறித்து கண்காணித்து புள்ளி விபரங்களை வெளியிடும் தளமான Layoffs.fyi என்ற தளத்தின் விவரங்களின்படி 2025-ஆம் ஆண்டில் இதுவரையில் 61,220-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2025-ஆம் ஆண்டு பிறந்து வெறும் ஐந்து மாதங்களே ஆன நிலையில் இந்த பணி நீக்கங்கள் சற்று அதிகம் என்றே பேசப்படுகிறது. சுமார் 13 வெவ்வேறு நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் முன்னணி நிறுவனங்களான மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களும் பணி நீக்கத்தில் ஈடுபட்டுள்ளன.
மே 13-ஆம் தேதி அன்று ரெட்மண்டைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் 6000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. 2023-ஆம் ஆண்டிலிருந்து உலகளாவிய பணியாளர்களில் 2,28,000 ஊழியர்களை மைக்ரோசாப்ட் குறைத்துள்ளது. இது அதன் மொத்த பணியாளர் எண்ணிக்கையில் சுமார் 3 சதவீதமாகும். இந்த பணி நீக்கங்கள் வெவ்வேறு துறைகளில் உள்ள ஊழியர்களை பாதித்துள்ளது. வாஷிங்டனில் சுமார் 2000 பதவிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கூகுள் நிறுவனமும் ஆண்ட்ராய்டு, பிக்சல் மற்றும் குரோம் ஆகியவற்றில் பணி புரியும் பல ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. பிப்ரவரியில் கிளவுட் பிரிவில் பணிபுரியும் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் 12000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இது அதன் மொத்த பணியாளர் எண்ணிக்கையில் 6 சதவீதமாகும்.
அமேசான் சமீபத்தில் அலெக்சா, எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், கிண்டல் மற்றும் ஜூக்ஸ் போன்ற தயாரிப்புகளை மேற்பார்வையிடும் பிரிவிலிருந்து சுமார் 100 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.
தொடர்ச்சியான பணி நீக்கங்கள் ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தி தங்கள் திறனை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் ஊழியர்கள் இருக்கின்றனர் என்பது மட்டும் தெளிவாகிறது.


Click it and Unblock the Notifications