இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்குச் சமீபத்தில் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட தகவலில், பல்வேறு கிரெடிட் கார்டு சேவைக் கட்டணங்களில் திருத்தங்கள் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் ஜூலை 1, 2024 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டுள்ள தகவல்கள் படி, பல்வேறு முக்கிய சேவைகளுக்கான கட்டணங்கள் நீக்கப்பட உள்ளன. நீக்கம் செய்யப்படும் கட்டணங்களின் விவரங்கள் பின்வருமாறு:

சார்ஜ் ஸ்லிப் கட்டணம்: ஜூலை 1 முதல், ஒரு சார்ஜ் ஸ்லிப் கோரிக்கைக்காக தற்போது வசூலிக்கப்படும் ரூ.100 கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.
காசோலை / ரொக்க பணம் பிக்-அப் கட்டணம்: காசோலை அல்லது ரொக்க பணத்தை எடுத்துச் செல்லும் சேவைக்கு ஜூலை 1 முதல் தற்போது வசூலிக்கப்படும் ரூ.100 கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
டயல்-அ-டிராப்ட் (Dial-a-Draft) பரிமாற்றக் கட்டணம்: டயல்-அ-டிராப்ட் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், ஜூலை 1 முதல் டிராப்ட் தொகையில் தற்போது வசூலிக்கப்படும் 3% அல்லது அதிகபட்சமாக ரூ.300 கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
வெளிநாட்டு காசோலை செயல்பாட்டு கட்டணம்: ஜூலை 1 முதல், வெளிநாட்டு காசோலைகளை செயல்படுத்த, காசோலை மதிப்பில் தற்போது வசூலிக்கப்படும் 1% அல்லது அதிகபட்சமாக ரூ.100 கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
டூப்ளிகேட் வங்கி கணக்கு அறிக்கை கட்டணம்: மூன்று மாத காலத்திற்கான டூப்ளிகேட் வங்கி கணக்கு அறிக்கை கேட்கும் வாடிக்கையாளர்களிடம், ஜூலை 1 முதல் தற்போது வசூலிக்கப்படும் ஒரு அறிக்கைக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
கார்டு ரீப்ளேஸ்மென்ட் கட்டணம்: ஜூலை 1 முதல், அனைத்து கார்டு ரீப்ளேஸ்மென்ட்-க்கு ரூ.200 என்ற நிலையான கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணம் தற்போது ஒவ்வொரு வகை கார்டுக்கும் மாறுபட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு: அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கான ரிவார்டு திட்டத்தில் ஜூன் 18 முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதில் முக்கியமாக அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்துவதற்கு இனி ரிவார்டு பாயின்ட் வழங்கப்பட மாட்டாது.
இருப்பினும், அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மூலம் எரிபொருளுக்கு செலவு செய்தால் கட்டணத்தில் 1% தள்ளுபடியை வழங்குவது தொடரும். இந்த தள்ளுபடிக்கு எந்த ரிவார்டு புள்ளிகள் வரம்பு அல்லது காலாவதி தேதியும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.
EMI: கடைசியாக இனி ஈஎம்ஐ திட்டம் மற்றும் தங்கம் வாங்குதல் ஆகியவற்றைத் தொடர்புடைய நிதி பரிமாற்றங்களுக்கு ரிவார்டு புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது என ஐசிஐசிஐ விளக்கம் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications