சென்னை: சுமார் 17,000 புதிய வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டுகளை ஐசிஐசிஐ பேங்க் முடக்கியுள்ளது.
ஐசிஐசிஐ பேங்கின் iMobile Pay செயலியில், ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக், கோ-பிராண்டட் கார்டுகள் உட்பட மற்ற வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களைப் பார்க்க முடிகிறது என்று ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் புகாரளித்த நிலையில், இந்த முடக்கம் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

ஐசிஐசிஐ பேங்கில் இருந்து புதிதாக கிரெடிட் கார்டுகளை வாங்கிய 17,000 வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகிறது.
சுமார் 17,000 நபர்களின் கிரெடிட் கார்டு விவரங்கள் பிற வாடிக்கையாளர்களுக்கும் தெரிவதாக எழுந்த புகாரின் பெயரில் ஐசிஐசிஐ பேங்க் இந்த கிரெடிட் கார்ட்களை முடக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கவலைக்குரிய செய்தி ஐசிஐசிஐ பேங்கின் iMobile Pay செயலி பாதுகாப்பானதாக இல்லை என்று பலர் சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்த பின்னரே வெளிச்சத்திற்கு வந்தது. மற்ற கிரெடிட் கார்டு வாடிக்கையாளரின் கார்டு நம்பர், கார்டு வெரிஃபிகேஷன் வேல்யூஸ் (CVV) போன்ற முக்கியமான தகவல்கள் iMobile Pay செயலியில் வெளிப்படையாகத் தெரிவதாகக் கூறித் தங்களின் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.
சமீபத்தில் வழங்கப்பட்ட சுமார் 17,000 புதிய கிரெடிட் கார்டுகள், தங்கள் டிஜிட்டல் தளங்களில், தவறான பயனர்களுடன் தவறாக இணைக்கப்பட்டதாக ஐசிஐசிஐ பேங்க் விளக்கமளித்துள்ளது. வாடிக்கையாளர் தரவைப் பாதுகாப்பதற்காக ஐசிஐசிஐ வங்கியால் செயல்படுத்தப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகள் கவலை அளிப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஐசிஐசிஐ பேங்கின் செய்தித் தொடர்பாளர் இந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டுள்ளார். சமீபத்திய நாட்களில் வழங்கப்பட்ட சுமார் 17,000 புதிய கிரெடிட் கார்டுகள் iMobile Pay செயலியில், ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறான நபர்களுடன் தவறாக இணைக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.
இந்தப் பிரச்சனை இருந்தபோதிலும், இது வரை தவறாக பணப் பரிவர்த்தனைகள் எதுவும் பதிவாகவில்லை என்று செய்தித் தொடர்பாளர் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்தார். மேலும், வாடிக்கையாளர்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டால் உரிய இழப்பீடு வழங்க வங்கி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
iMobile Pay செயலி என்றால் என்ன?: இது ஐசிஐசிஐ பேங்கின் அதிகாரப்பூர்வ ஆப் ஆகும். இந்த ஆப் சுமார் 400 பேங்க் சேவைகளை வழங்கி வருகிறது. ஐசிஐசிஐ பேங்க் வாடிக்கையாளர்கள் மற்றும் ஐசிஐசிஐ பேங்க் அல்லாத வாடிக்கையாளர்களும் இந்த ஆப்-ஐ பயன்படுத்தலாம்.
வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?: ஏதேனும் சந்தேகத்திற்குரிய செயல்பாடு அல்லது அங்கீகரிக்கப்படாத கட்டணங்கள் இருக்கிறதா என்பதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். அது போன்ற சம்பவங்கள் ஏதேனும் நடந்திருந்தால் உடனே ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டு புதிய கார்டுகளை வழங்குமாறு கோரிக்கை வைக்க வேண்டும். ஏதேனும், அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை, நீங்கள் கவனித்தால் அவற்றை உடனே பேங்கிற்கு தக்க ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications